`நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தவும்'- தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய அதிமுகவினர்!

`நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தவும்'- தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய அதிமுகவினர்!

மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கணக்கில் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவற்றைத் தமிழக அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு ஆகியவற்றை எதிர்த்து மாநிலம் முழுவதும் 72 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரையில் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ தலைமையிலும், கிருஷ்ணகிரியில் கே.பி முனுசாமி தலைமையிலும், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையிலும், திண்டுக்கல்லின் சீனிவாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களான தாலிக்குத் தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும், திமுகவைக் கடுமையான எதிர்க்க வேண்டிய சூழலும் இருந்து வருகிறது. இதன் காரணமாகத் தொண்டர்களை அணிதிரட்டும் வகையில் அதிமுகவினர் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in