40 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல வேண்டும்; இபிஎஸ் அதிரடி அறிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“அதிமுகவை  அழித்திடத் துடித்த நேரத்தில், அனைத்து சதிகளையும், சூழ்ச்சிகளையும் வீழ்த்தி கழகத்தை மீட்டு, வீறுநடை போடச் செய்திருக்கிறோம். அதனால் வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற உழைத்திட வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறிய நிலையில் திமுகவில் கூட்டணியில் உள்ள கட்சிகளைச் சேர்ந்த சிலர் அதிமுகவுக்கு தூதுவிட்டதாக தகவல்கள் கசிந்தன. அதேசமயம், எஸ்டிபிஐ உள்ளிட்ட முஸ்லிம் இயக்கங்களும் அதிமுக கூட்டணியில் இடம் பெறும் நோக்கில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையெல்லாம் வைத்து, மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையானது அதிமுக தனித்துப் போட்டி என்ற தோரணையை உருவாக்கி இருக்கிறது.

அதிமுகவின் 52-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஒரு குடும்பம் தமிழ் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறது. இந்தியத் திருநாடு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், மக்களை நம்பி கழகம் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

மக்களவைத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது என்கிற வெற்றிச் செய்தி தான், தமிழ் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் முழக்கமாக அமையும் என்பதை நாம் அனைவரும் மனதில் நிலைநிறுத்தி அயராது பணியாற்றிட வேண்டும்’’ என கூறியுள்ளார்.

இதை மேற்கோள்காட்டி, ஜெயலலிதா பாணியில் தனித்து களமிறங்க எடப்பாடி பழனிசாமி துணிந்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், கூட்டணியில் சிறிய கட்சிகளை கொண்டு வந்து அவற்றை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்பதும் எடப்பாடியாரின் திட்டமாக உள்ளது என்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in