`திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான்'- ஆர்ப்பாட்டத்தில் பாஜகவுக்கு நினைவூட்டிய செல்லூர் ராஜூ

`திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான்'- ஆர்ப்பாட்டத்தில் பாஜகவுக்கு நினைவூட்டிய செல்லூர் ராஜூ

``திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூகூறினார்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், அறிவிப்பைத் திரும்பப் பெற கோரியும், அதிமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை முனிச்சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி, திமுக மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, "மக்களுக்கு ஷாக் அடிக்கும் சூழ்நிலையை திமுகவினர் உருவாக்கி உள்ளனர். அதிமுக, எடப்பாடி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இக்கூட்டம். இது காசுக்காக அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல, தானா சேர்ந்த கூட்டம், ஆர்ப்பரித்து சேர்ந்துள்ள கூட்டம். ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை வருடத்தில் ஒன்றுமே திமுக செய்யவில்லை. ஸ்டாலின் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பொய்யை தான் சொல்கின்றனர். வாய்ச்சவடால் தான் பேசுகின்றனர். தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

கலைஞர், உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதப் பயன்படுத்திய பேனாவை கடலில் கட்ட போகிறார்களாம். மக்கள் கடனில் தவிக்கிறார்கள், கடலில் பேனா கட்டுகிறார்களாம். கடனால் மக்கள் பசி பட்டினியில் தவித்துக் கொண்டிருக்கும் போது கலைஞர் பேனாவுக்கு சிலையா?. சிமென்ட் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கும் போது 81 கோடி ரூபாயில் பேனாவுக்கு சிலையா? இதுக்கு பணம் உள்ளது, வாக்களித்த மக்களுக்கு பணம் இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல மதுரையில் 100 பேருந்துகள் ஓடிய நிலையில், வெறும் 39 பேருந்துகளே ஓடுகின்றன. மதுரை மக்களுக்கு ஒரு சல்லி பைசா கூட திமுக அரசு கொடுக்கவில்லை. ஆனால், அப்பா பெயரில் நூலகக் கட்டிடம் கட்ட மட்டும் நிதி உள்ளது. திட்டங்களுக்கும், மதுரைக்கும் கொடுக்க திமுகவுக்கு வக்கில்லை, வகையில்லை. இது தான் ஆட்சியின் திறனா? சண்டால பயலுகளா, நாசமா போங்க என தமிழக பெண்கள் திமுகவை சொல்கிறார்கள். மின் கட்டண உயர்வுக்கு நம்ம அணில், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்களா எனக் கூறுகிறார். திமுக, ஒன்றிய அரசு சொன்னதை எல்லாம் செய்தார்களா? ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க சொன்னார்கள். அதை செய்ததா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் தமிழகம் முன்மாதிரியாக சிறப்பாக இருந்தது. இவர்கள் ஆட்சியில் இந்தியாவிலேயே மோசமான நிலைக்கு சட்டம் ஒழுங்கு சென்றுவிட்டது. தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்லை. நீட்டை ரத்து செய்ய என் தந்தைக்கு தான் சூசகம் தெரியும் என உதயநிதி சொன்னாரு. ஆனால், இப்போ வரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. திமுக வாக்குறுதி கொடுத்த பிறகு, இரண்டு முறை நீட் தேர்வு நடைபெற்றுவிட்டது. பிணத்தை வைத்து, மாணவர்களின் உயிரை வைத்து அரசியல் நடத்திய திமுக நீட்டை ரத்து செய்யாதற்கு பதில் சொல்ல வேண்டும்.

ஒரு அனிதா இறந்ததற்கு பயங்கரமாக போராடினார்கள், இப்போது கள்ளக்குறிச்சி பிரச்சினையில் ஆளும் கட்சியும், அதன் தோழமைகளும் எங்கே போனார்கள்? முல்லை பெரியாறு அணையைக் காப்பாற்ற வக்கு இல்லையா என முதல்வரிடம் கேள்வியை முன் வைக்கிறேன். லெஜண்ட் சரவணன் போல வரும் ஸ்டாலின், செஸ் போட்டிக்கு விளம்பரம் தருகிறார். ஆனால், செஸ் சாம்பியன்களை அதில் காணவில்லை. திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்" என்றார்.

திமுகவுக்கு அடுத்து நாங்கள் என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் செல்லூர் ராஜூ மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in