நிலையான புத்தியில்லாதவர் ஓபிஎஸ்!

அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தாக்கு
புகழேந்தி
புகழேந்திE_LakshmiNarayanan

சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் இருந்தே கிளம்பியிருக்கிறது. விளைவாக, ஓபிஎஸ்சின் சொந்தத் தம்பியே கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த 3 பேருடனும் நெருக்கமான உறவைப் பேணியதன் வாயிலாக அவர்களின் குணநலன்களை நன்கு அறிந்தவரான பெங்களூரு புகழேந்தியிடம் இப்பிரச்சினை பற்றி பேசினோம். 'காமதேனு' இதழுக்காக அவர் அளித்த பேட்டி இது.

ஓபிஎஸ்சின் சொந்தத் தம்பியான ஓ.ராஜா நீக்கம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ஓபிஎஸ் வீட்டிலேயே, சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுவார்களாம். அந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாக ஓபிஎஸ் தம்பி சசிகலாவைப் போய்ப் பார்த்தால் அவரைக் கட்சியைவிட்டு நீக்குவார்களாம். விளையாட்டுச் செய்திகள் இத்துடன் நிறைவடைந்தன என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இந்த அறிவிப்பு வெளியான போது ஓபிஎஸ் தேனியின்தான் இருந்தார். பிறகெப்படி அந்த கட்சி நீக்க அறிக்கையில் கையெழுத்துப் போட்டார். ஒருவேளை, நிறைய கடிதங்களில் முன்கூட்டியே அவரிடம் கையெழுத்து வாங்கிவைத்திருக்கிறாரா ஈபிஎஸ்? அடுத்த விளையாட்டுச் செய்தி மீண்டும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்தித்துப் பேசும்போது தொடங்கும்.

சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கியபோதே அவருடன் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அறிவித்தார்கள். அதை மீறும்போது நடவடிக்கை எடுப்பது சரிதானே?

முதலில் அதிமுகவின் சட்ட திட்ட விதிகளை திருத்தியதே தவறு. சட்டப்படி அது செல்லவும் செல்லாது. அதாவது சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அவருக்கு அடுத்த அதிகாரம் படைத்தவர் ஓபிஎஸ்தான். ஆனால், இன்று அதிமுகவின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார் ஈபிஎஸ். ஓபிஎஸ் பற்றி யார் என்ன பேசினாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஆனால், ஈபிஎஸ் பற்றி பேசியதற்காக அமைச்சராக இருந்தவரைக்கூட (மணிகண்டன்) நீக்கினார்கள். ஜெயக்குமாரை கைது செய்தால் மாவட்டந்தோறும் போராட்டம் நடத்துகிற அதிமுக, ராஜேந்திர பாலாஜியையோ, மணிகண்டனையோ கைது செய்தால் மட்டும் கண்டுகொள்ளவில்லையே ஏன்?

இப்போதுகூட சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறிய செய்தியறிந்ததும், பல மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்சை திட்டி பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஓபிஎஸ் தம்பி உள்ளிட்டவர்களை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். இப்படி அவருக்கொரு சட்டம், இவருக்கொரு சட்டம், ஆளுக்கொரு நீதி என்றால் என்ன செய்வது? இது கட்சியா அல்லது வேறு எதுவுமா? சட்டப்பேரவைத் தேர்தலின்போது இவர்கள் மீது பொதுமக்கள் தான் நம்பிக்கை இழந்தார்கள். இப்போது இவர்கள் மீது தொண்டர்களும், நிர்வாகிகளும் கூட முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.

ஓபிஎஸ்சுடன் நீங்கள் காரில் வந்துகொண்டிருந்தபோதே, உங்களைக் கட்சியை விட்டு நீக்கிய அறிவிப்பு அவரது கையெழுத்துடன் வெளியானது இல்லையா?

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று நான் சொன்னதால், என்னைக் குறிவைத்திருந்தார் ஈபிஎஸ். இந்த நேரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிமுகவை கடுமையாக விமர்சித்ததுடன், ஓபிஎஸ் எல்லாம் ஒரு லீடரே கிடையாது என்று பேட்டி கொடுத்தார். அவருக்கு நான் பதிலடி கொடுத்ததும், கூட்டணி கட்சித் தலைவரை விமர்சிப்பதா என்று என்னை கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்கள். இத்தனைக்கும் அந்த அறிவிப்பு வெளியானபோது, நான் ஓபிஎஸ்சுடன் அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அவரது டி.நகர் வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தேன்.

வீட்டிற்கு வந்ததும், "என்னண்ணே... எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியை ஏத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு, இப்ப திடீர்னு ஒப்புக்கிட்டீங்க" என்று கேட்டேன். "அதைவிட விடுங்க புகழேந்தி, அதைவிட பெரிய நியூஸ் ஒண்ணு இருக்கு தெரியுமா?"ன்னு கேட்டாரு. "என்ன நியூஸ், கட்சி முழுக்க உங்க கட்டுப்பாட்டுக்கு வருதா?"ன்னு கேட்டேன். "இல்லங்க, உங்களை கட்சியை விட்டு நீக்கணும்னு சொன்னாங்கள்ல... அந்த அறிவிப்புல கையெழுத்துப் போட்டுட்டேன்" என்றார். ஓபிஎஸ் நிலையான புத்தியில்லாதவர். நிறைய தடவை ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே சண்டை வந்திருக்கிறது. ஓபிஎஸ் பக்கம் என்னைப் போல பல பேர் நின்றிருக்கிறோம். வேதனை என்னன்னா... ஓபிஎஸ் எதிலுமே துணிச்சலா, உறுதியா நிற்கவே மாட்டார். தனக்காக நின்றவர்களை ஈபிஎஸ் பழிதீர்க்கும்போது, அதைத் தடுக்கவும் மாட்டார்.

65 எம்எல்ஏ-க்களுடன் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது. ஆனால், களத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக பாஜகவே செயல்படுகிறதே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உக்ரைனை ரஷ்யா அடிக்கிறதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் உக்ரைன்காரனே செஞ்சி கொடுத்தது மாதிரி, தமிழ்நாட்டுல அதிமுகவை அழிச்சி பாஜக வளர்றதுக்கு எல்லா ஏற்பாட்டையும் ஓபிஎஸ் ஈபிஎஸ் ரெண்டு பேருமே செஞ்சி கொடுத்துட்டாங்க. முதலை வாய்க்குள்ள போன எதுவும் எப்படி மீண்டு வர முடியாதோ, அந்த மாதிரி பாஜக வாய்க்குள்ள போன அதிமுகவும் இனிமே முழுசா மீண்டு வர்றது சந்தேகம்தான்.

தமிழ்நாடு சமூகநீதி, சமத்துவம் பேசுகிற மாநிலம். அதற்கு நேர் எதிரான பாஜகவோடு சேர்ந்து அரசியல் செய்வதெல்லாம் தற்கொலைக்குச் சமமானது என்று எத்தனையோ பேர் சொல்லிப் பார்த்துவிட்டோம், கேட்கவே இல்லை. மிகச்சரியாக பாஜவை எதிர்த்து அரசியல் செய்து, முதல்வர் ஸ்டாலின் நற்பெயரையும், புகழையும் குவித்துக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு அல்ல, எதிர்த்து நிற்பதற்கே தகுதியற்ற தலைவர்களாக ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் ஆகிவிட்டார்கள்.

சின்னம்மா வந்தால் கட்சி மீண்டுவிடும் என்கிறீர்களே, அந்தம்மா சிறையில் இருந்து வெளிவந்தபோதும் இப்படித்தான் பில்டப் கொடுத்தார்கள். ஆனால், அவரால் எதையுமே சாதிக்க முடியவில்லையே?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்துசென்றவர்கள், விலகிச் சென்றவர்கள் எல்லோரும் முதலில் ஒன்று சேர வேண்டும். அப்படி ஒன்று சேர்ந்தால்தான் கட்சி வலிமை பெறும். சசிகலா தலைமை தாங்கினால்தான் கட்சி வலிமைபெறும் என்று சொல்லக்கூடாது. இது புரிந்ததால்தான், அவரேகூட எல்லோரும் ஒன்று சேருங்கள் என்று சொல்கிறாரே தவிர, எல்லோரும் என் தலைமையை ஏற்று வாருங்கள் என்று சொல்வதில்லை. எனவே, இன்று நாம் பேச வேண்டியது எல்லோரும் ஒன்றிணைவதைப் பற்றித்தான். யார் தலைவர் என்பதைப் பின்னால் முடிவு செய்துகொள்ளலாம்.

டி.டி.வி.தினகரனையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று குரல்கள் கேட்கின்றன. அவருடன் நெருக்கமாக இருந்தவர் என்கிற முறையில், சொல்லுங்கள் தினகரன் அதிமுகவுக்கு வருவது கட்சிக்குப் பலம் சேர்க்குமா?

டி.டி.வி.தினகரன் கட்சிப் பொறுப்புக்கு வந்தால் எல்லாம் கெட்டுப்போயிடும் சார். ஒருவேளை, அவரைக் கட்சியில் சேர்த்தாலும்கூட, அவரை ஒரு எட்டு பின்னாலேயே வைத்திருக்க வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், சசிகலாவின் முழு கட்டுப்பாட்டில்தான் தினகரன் இருக்க வேண்டும். அவரது கட்டுப்பாட்டில் சசிகலாவோ, கட்சியோ வந்துவிட்டால், அப்புறம் அதிமுகவை கடவுளால்கூட காப்பாற்ற முடியாது. அதற்கு அமமுகவே உதாரணம். டி.டி.வி.தினகரனை கட்சியினர் மட்டுமின்றி மக்களும் ஏற்கெனவே புறக்கணித்துவிட்டார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in