ஊசலாடும் அதிமுக பதவி : சபாநாயகர் முடிவுக்குக் காத்திருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!

ஊசலாடும் அதிமுக பதவி : சபாநாயகர் முடிவுக்குக் காத்திருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!

சட்டமன்ற எதிர்க் கட்சிப் பதவி தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் சட்டப்பேரவை தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தனர். இருதரப்பினர்களின் கருத்தைக் கேட்டபிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்ட விதிகளின்படி இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை என்பதால் அந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் இரு தரப்பினரும் தேர்தல் ஆணையம், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு மாறிமாறி கடிதம் எழுதி வருகின்றனர்.

அதிமுகவில் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க் கட்சித் தலைவராக ஈபிஎஸ்சும், எதிர்க் கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ்சும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், ‘பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி அதிமுக சார்பாகச் சட்டமன்ற பதவிகள் குறித்து மனுக்கள் வந்தால் அதை நிராகரிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுவிட்டதால் சட்டப்பேரவையில் அதிமுக சார்பாக ஓபிஎஸ் வகிக்கும் பதவியை நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் இருதரப்பினரிடமும் கருத்துக் கேட்ட பிறகே அப்பாவு முடிவு எடுக்க உள்ளதாகச் சட்டப்பேரவை அலுவலக வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in