`அதிமுகவை காப்பாற்ற இதுதான் வழி; விட்டுக்கொடுங்கள் ஓபிஎஸ்'- பற்றவைக்கும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ!

`அதிமுகவை காப்பாற்ற இதுதான் வழி; விட்டுக்கொடுங்கள் ஓபிஎஸ்'- பற்றவைக்கும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ!

``கட்சியை கட்டிக் காப்பாற்றும் ஒருவருக்காக மற்றொருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும்'' என்று மதுரையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "ஒற்றைத் தலைமை என்ற விவாதம் எழுந்து உள்ளது. அதற்கு பொது குழுவில் முடிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சட்டத்தில் மாறுதல் செய்வது தவறில்லை. அதுமட்டுமின்றி, சட்ட திருத்தம் செய்வது புதிதல்ல. மாவட்டச் செயலாளர்கள் 90% பேர் ஒற்றைத் தலைமையை எதிர்பார்க்கின்றனர். நல்ல தலைமையை உருவாக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிளைக் கழகச் செயலாளர் தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறோம். அவர்கள் நல்ல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "2019-ம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் என கூறினேன். மூன்று ஆண்டுகளாக இருவரின் தலைமையை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டேன். தற்போது, பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். அது கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி.

மேலும், நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. அவர் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகாரப் பூர்வமான கூட்டம் இல்லை. ஜானகி பெருந்தன்மையாக விட்டு கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும்.

கட்சியை கட்டிக் காப்பாற்றும் ஒருவருக்காக மற்றொருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா தனிக் கட்சி ஆரம்பித்தபோது, சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. நான்கு ஆண்டுகள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்தியவருக்கு, மற்றவர் தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in