சட்டப்பேரவை கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?- எம்எல்ஏக்களை கூட்டி திட்டம் போடும் ஈபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவை வரும் 17-ம் தேதி கூடுகிறது. இந்நிலையில் முதல்வர் தலைமையில் கடந்த 14-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக நடை செய்யும் மசோதாவை இயற்றுதல்,  புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்தல், பரந்தூர் விமான நிலைய நிலங்கள் கையகப்படுத்துவது உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் சட்டப் பேரவைத் தலைவருக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஏதாவது கடிதம் கொடுக்கப்பட்டால், அது தொடர்பாக எனது கருத்தைக் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ எனத் தெரிவித்திருந்தார்.

அதுபோல் எடப்பாடி பழனிசாமியும் சட்டப்பேரவை தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுவிட்டார். அதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஆர்.பி உதயகுமாருக்கு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் அருகில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என பாஜகவினர் பொதுவெளியில் பேசி வருகிறார்கள். அதுபோல் ஓபிஎஸ்சிற்கு அதிமுகவில் செல்வாக்கு இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நாளை மாலை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஆளும் கட்சியைத் திணறடிக்க வைப்பதற்கான பிரச்சினைகளை எழுப்புவது குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகத் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in