
"கோவை செல்வராஜ் தன்னுடைய சுய நலத்துக்காக திமுகவில் சேர்ந்திருக்கிறார்" என்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஆன ஐயப்பன் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவில் நீடித்து வந்த கோவை செல்வராஜ், அதன் பின்னர் ஓபிஎஸ்- ஈபிஎஸ் பிரிவுக்கு பிறகு எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதன் பின்னர் ஓபிஎஸ் தலைமையிலான அணியில் கோவை செல்வராஜ் இணைந்து செயல்பட்டார். அப்போது, எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் உடனான உறவில் அவருக்கு விரிசல் ஏற்பட்டது. ஓபிஎஸ் தொடர்பான கூட்டங்களை தவிர்த்து வந்த கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். அதே நேரத்தில் திராவிட கட்சி உடனான எனது தொடர்பு நீடிக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் கோவை செல்வராஜ் இன்று திமுகவில் இணைந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஒன்றரை ஆண்டு கால ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சி தமிழகம் சீரழிந்து விட்டதாகவும் குற்றம்சாற்று இருந்தார்.
இதனிடையே திமுகவில் கோவை செல்வராஜ் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான ஐயப்பன், "கோவை செல்வராஜ் தன்னுடைய சுய நலத்துக்காக திமுகவில் சேர்ந்திருக்கிறார். அவர் திமுகவுக்கு சென்றதினால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.