சீட் கிடைக்காத அதிமுகவினருக்கு வலைவீசும் பாஜக

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இணைந்த அதிமுகவினர்
சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இணைந்த அதிமுகவினர்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததுமே தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் களம் மாறத் தொடங்கிவிட்டது. திமுக தன்னுடைய கூட்டணி உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. அதிமுக கூட்டணியிலோ கூட்டணியில் யார் பெரியவர் என்கிற யுத்தம் தொடங்கியது. விளைவாக, ஏற்கெனவே நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது பாட்டாளி மக்கள் கட்சி. அதன் தொடர்ச்சியாக இப்போது பாஜகவும் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்பியே இந்த மாற்றம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தாலும்கூட, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்கிற எண்ணம் அக்கட்சிக்கு நீண்ட காலத்துக்கு முன்பே வந்துவிட்டதே இந்தப் பிரிவுக்குக் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்தப் பிரிவுக்கான காரணங்களில் ஒன்று மதுரை மாநகராட்சி. மதுரையில் உள்ள 100 வார்டுகளில் குறைந்தது 25 வார்டுகளாவது தங்களுக்கு வேண்டும் என்று கோரியது பாஜக. ஏதோ மிகப்பெரிய ஜோக்கை கேட்டதுபோல விழுந்து விழுந்து சிரித்தார், அதிமுகவின் மதுரை மாநகர மாவட்டச் செயலளாரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ. கொங்கு மண்டலத்திலும் இதே கதைதான். விளைவாக தனித்துப் போட்டியிட விரும்புவதாக அறிவித்தது பாஜக.

“எங்கள் கட்சி சார்பில் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. கட்சிக்காரர்கள் இல்லாத வார்டுகளில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், ரோட்டரி சங்கத்தினரைப் போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம்” என்று 2 மாதத்துக்கு முன்பே சொல்லியிருந்தார், மதுரை மாநகர மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காத அதிமுகவினர், 2 பேர் இன்று மாலை மாவட்ட தலைவர் சரவணன், மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். எஸ்.எஸ்.காலனி அதிமுக முன்னாள் கவுன்சிலர் லட்சுமி, 61-வது வார்டு அவைத்தலைவர் டி.கே.ராஜகோபாலன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். மேலும் 10 பேரை பாஜகவுக்கு இழுப்பதற்கான வேலைகள் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவில் சீட் தரப்படாத ஆத்திரத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், அடுத்த சில மணி நேரத்தில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல அதிமுகவில் கவுன்சிலர் சீட் கிடைக்காமல் பாஜகவில் சேர்ந்தவர்கள், தங்களுக்கும் பாஜகவில் சீட் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி தொடரும் என்ற அண்ணாமலையின் அறிவிப்புக்கு இந்த நடவடிக்கைகள் ஊறுவிளைவித்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் அதிமுகவினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in