அம்மா காலத்து அதிமுக எங்கே?

ஆக்‌ஷனுக்குப் பயந்து அடக்கி வாசிக்கிறார்களா?
சட்டப்பேரவையில் உரையாற்றும் ஓபிஎஸ்
சட்டப்பேரவையில் உரையாற்றும் ஓபிஎஸ்

திமுகவினரை அதிமுகவினர் நேருக்குநேர் பார்க்க நேர்ந்தால் ஒன்றும் பேசாமல் ஒதுங்கிச் சென்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால், இன்றோ சட்டப்பேரவையிலேயே அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் திமுகவைப் பாராட்டிப் பேசுவதை அடிக்கடி காண முடிகிறது. ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுகவா இது என்ற சந்தேகம் இன்று ரத்தத்தின் ரத்தங்களுக்கு வந்துவிட்டது. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்த பிறகு அதிமுகவிடம் தென்படும் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? ஊழல் வழக்குகளா, அரசியல் நாகரிகமா?

எதிர்பாராத காட்சிகள்


சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியபோது, அமைதியாக உட்கார்ந்திருந்த அதிமுக எம்எல்ஏ-க்கள், பட்ஜெட் தாக்கலின்போது அவையைப் புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். அடுத்த நாளே, கோடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொந்தளித்தார். கோடநாடு கொலையாளிகளுக்குத் திமுக உதவுவதாகப் பேட்டி அளித்து அனலைக் கக்கினார். இரு நாட்களுக்கு சட்டப்பேரவைப் புறக்கணிப்பையும் அதிமுக அறிவித்தது. எனவே, இந்த முறை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அதிமுக - திமுகவுக்கு இடையே அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதிமுக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக்கு வந்தபோது காட்சிகள் அடியோடு மாறின.


காட்சி: 1


எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், சட்டப்பேரவையில் பேசிய பேச்சு அதிமுகவினரை மட்டுமல்ல, திமுகவினரையே திகைக்க வைத்தது. “சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும்” என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின்கீழ் அறிவிப்பு செய்தார். இந்த விதியின்கீழ் அறிவிப்பு வெளியிடும்போது, அதைப் பற்றி விவாதம் எதுவும் செய்ய முடியாது. ஆனால், பாராட்டிப் பேசலாம் என்று அதிமுக ஆட்சிக் காலத்தில் எழுதப்படாத விதி உருவாகிவிட்டது. அதை திமுகவும் தற்போது பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த அறிவிப்பை வாழ்த்திப் பேசிய ஓபிஎஸ், “என் தந்தை, கலைஞரின் தீவிரமான பக்தர். அவரது பெட்டியில் எப்போதும் கலைஞரின் ‘பராசக்தி’, ‘மனோகரா’ படங்களின் கதை, வசனம் அடங்கிய புத்தகங்கள் இருக்கும். அதை எங்களிடம் மனப்பாடமாக ஒப்புவிப்பார். அவர் இல்லாத நேரத்தில், அதை எடுத்துப் படித்து, நாங்களும் அதேபோல் பேசிய ஆற்றல் எங்களுக்கு இருந்தது. இந்த மன்றத்தில் 50 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பல்வேறு சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிற தலைவர்களுக்கு அமைக்கப்படும் நினைவிடம் ஒரு வரலாறாக என்றென்றும் இந்த உலகம் இருக்கும்வரை நிலைத்து நிற்கும். இதை அதிமுக சார்பாக முழுமனதோடு வரவேற்கிறேன்” என்று பேசியதைக் கேட்டு சட்டப்பேரவையே நிசப்தமானது.

“திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்துவிட்டால், பிறகு நினைவிடம் கட்ட வேண்டும் எனச் சொல்வார்கள்” என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அன்று வாதிட்டது. ‘அந்த அரசில் துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸா இப்படிப் பேசுகிறார்?’ என்ற கேள்வியை அவரது பேச்சு ஏற்படுத்தியது.

காட்சி: 2

சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் பணி செய்த துரைமுருகனைப் பாராட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானத்தின் மீது துரைமுருகனை வாழ்த்தி ஓபிஎஸ் பேசியதுதான் ஹைலைட்! துரைமுருகனின் பணிகளைப் பாராட்டிப் பேசிய அவர், முத்தாய்ப்பாக, “சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்பவர் துரைமுருகன்” என்று குறிப்பிட்டார். ஓபிஎஸ்ஸின் இந்தப் புகழுரை அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது. 1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா தலைவிரி கோலமாக இருக்கும் படத்தை சமூக ஊடங்களில் அதிமுகவினர் பலர் பகிர்ந்து தங்கள் அதிருப்தியைப் பதிவுசெய்தார்கள்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

எம்ஜிஆருக்கே தலைவராக இருந்தவர் என்ற வகையில், கருணாநிதியைப் புகழ்பாடுவதைக்கூட அதிமுகவினரால் ஜீரணிக்க முடிகிறது. ஆனால், அமைச்சர் துரைமுருகனைப் பாராட்டி ஓபிஎஸ் பேசியதைத்தான் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இதுதொடர்பாக அதிமுக மத்திய மண்டல நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசினார். “1989-ல் முதன்முறையாக அம்மா சட்டப்பேரவைக்குள் சென்றபோது, தலைவிரி கோலமாக வெளியே வந்தார். அன்று நடந்த களேபரத்தில் ஒரு பெண் என்றும் பாராமல் தன்னுடைய சேலையைப் பிடித்து துரைமுருகன் இழுத்தார் என்று அம்மா குற்றம்சாட்டினார். அப்படிப்பட்ட துரைமுருகனைச் சட்டப்பேரவைக்கு இலக்கணமாகத் திகழ்பவர் என்றெல்லாம் ஓபிஎஸ் பாராட்டிப் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது?” என்று கொந்தளித்தார் அந்த நிர்வாகி.

காட்சி: 3

திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் பற்றிப் பேரவையில் பேச்சு வந்தபோது, அந்த நூலகத்தை அதிமுக ஆட்சி சீரழித்துவிட்டதாகத் திமுக உறுப்பினர் கிரி குற்றம்சாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலினும், அண்ணா நூலகத்தை அதிமுக ஆட்சி பாழாக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இடையே பதிலளித்து பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, அண்ணா நூலகத்தின் கட்டுமானம் மற்றும் அங்கு உள்ள நூல் சேகரிப்பால் தான் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டதாகப் பேசிவிட்டு தான் குற்றச்சாட்டுகளுக்கே பதிலளித்தார்.

காட்சி: 4

உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் வழக்குகளைப் பதிவுசெய்து திமுக அரசு நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்ட வேளையில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில் எஸ்.பி.வேலுமணியின் பேச்சைக் கேட்கப் பலரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அவருடைய பேச்சில் அனலும் கனலும் இல்லாமல் போனது. “தேர்தல் அறிக்கையில் சொன்ன 505 வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் செயல்படுத்துவதாகத் திமுக கூறுகிறது. அத்தனையையும் உடனே நிறைவேற்ற முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். பொதுமக்கள் எதிர்பார்க்கும் முக்கிய வாக்குறுதிகளையாவது விரைந்து நிறைவேற்ற வேண்டும்” என்று எஸ்.பி.வேலுமணி நன்றியும் கோரிக்கையுமாகக் கலந்து பேசினார். ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுகிறது’ என்று சொல்லித்தான் திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்தியது. ஆனால், சட்டப்பேரவையில் திமுகவுக்கு அனுசரணையாகவே பேசி ஆச்சரியப்படுத்தினார் எஸ்.பி.வேலுமணி.

காட்சி: 5

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, பாஜகவைத் தொடர்ந்து அதிமுகவும் வெளிநடப்பு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் சபைக்கு ஓபிஎஸ் திரும்பியபோது, “அவை முன்னவர் துரைமுருகன் என் மதிப்புக்குரியவர். என் நிலையையும் நன்றாக அறிந்தவர். ‘நதியினில் வெள்ளம்… கரையினில் நெருப்பு… இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு. இதுதான் என் நிலை” என்று திரைப்படப் பாடலை மேற்கோள் காட்டிப் பேசியது விவாதப் பொருளானது. அவரது இந்தக் கருத்துக்குக் காரணமாக அமைந்தது அமைச்சர் துரைமுருகனின் பேச்சு. துரைமுருகனே கோரியபடி, அவருடைய கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அப்படி நடந்திராவிட்டால், அதிமுகவுக்குள் மேலும் அதிருப்தி அலைகள் உருவாகியிருக்கும்.

சசிகலா - ஓபிஎஸ்
சசிகலா - ஓபிஎஸ்

எல்லாம் வழக்கு பயம்

அந்த அளவுக்கு சட்டப்பேரவையில் அதிமுக தலைவர்களே திமுக அரசுக்கு அனுசரணையாக மாறியிருக்கிறார்கள். இதுபற்றி அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். “இதற்கெல்லாம் அதிமுகவினர் மீதான ஊழல் வழக்குகள்தான் காரணம். வழக்குகளுக்காக அதிமுகவினர் பயப்படுகிறார்கள். எதிர்க்கட்சி அரசியலுக்கு இவர்கள் தகுதியானவர்களாக இல்லை. போர்க்குணத்துடன் செயலாற்றி, ஆளுங்கட்சியாக இருந்த திமுகவின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் மீண்டும் ஆளுங்கட்சியாக வெற்றி பெற்றதுதான் அதிமுக. இதுதான் அதிமுகவின் கடந்த கால வரலாறு. தற்போது கட்சியைப் பலிகொடுத்துவிட்டு, தங்களைக் காப்பாற்றிக்கொள்வதில்தான் குறியாக இருக்கிறார்கள். எந்த ஒரு அதிமுக தொண்டரும் ஓபிஎஸ், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோரின் பேச்சுகளை ரசிக்கவில்லை, விரும்பவில்லை. அவர்கள் மீது தொண்டர்கள் வெறுப்பாக இருக்கிறார்கள்” என்றார் கே.சி.பழனிசாமி.

2017-ல் முதல்வராக இருந்த ஓபிஎஸ், பதவி பறிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினார். அன்று முதன்முறையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, “எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினுடன் ஓபிஎஸ் நட்பாக இருக்கிறார். அவரைப் பார்த்து சிரிக்கிறார்” என்று காட்டமாக விமர்சித்தார்.

இப்போது, அதையெல்லாம் கடந்து இதெல்லாம் நடக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in