சொட்டு கண்ணீர் கூட வரலை... ஆர்பாட்டத்திற்கு க்ளிசரின் கொண்டு போகாத உதயநிதி! ஜெயக்குமார் கிண்டல்!

உதயநிதி- ஜெயக்குமார்
உதயநிதி- ஜெயக்குமார்

’’உதயநிதி மகா நடிகர் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு அவர் கிளிசரின் கொண்டு போகவில்லை போல’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்தையும், அமைச்சர் உதயநிதியையும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார். இதுத் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘’நீட்டை ஒழிப்பதற்கு முதல் கையெழுத்துப் போடுவோம், எங்களுக்கு அந்த சூட்சமம் தெரியும் என்று சொன்னீர்களே, அந்த கையெழுத்தைப் போட்டு ஒழிக்க வேண்டியது தானே.

இப்போது அந்த சூட்சமம் என்னவென்றால், 2024-ல் மத்தியில் காங்கிரஸ் வந்த பிறகு நீட்டை ஒழிப்போம் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இந்த டயலாக் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதை நம்பத் தயாராக இல்லை.

தி.மு.க ஆதரவில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது, நீட்டை கொண்டுவர மாட்டோம் என ஆதரவை வாபஸ் பெற வேண்டியதுதானே. அன்றைக்கே நீட்டை கொண்டுவந்து, விதையும் போட்டுவிட்டு, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக கிளிசரின் கண்ணீர் வடிப்பதை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.  உண்ணாவிரத போராட்டத்தின் போது கிளிசரின் கொண்டு வரவில்லை போல ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. ஆட்சி நடத்தத் தெரியாத ஒரு அரசு தான் தமிழ்நாட்டை இன்றைக்கு ஆள்கிறது. முடியவில்லை என்றால் ஆட்சியை விட்டுப் போங்கள்.

அவர் (முதல்வர் ஸ்டாலின்) சொல்வதைப் போலவே, `சூடு, சொரணை, மானம், ரோஷம் இருந்தால், ஆட்சியில் இருந்தும் நான் எதுவும் செய்ய முடியவில்லை, இந்த ஆட்சி எனக்குத் தேவையில்லை' என்று அவர் சொல்லியிருந்தால் மானமுள்ள தமிழன் ஸ்டாலின் என்று சிலை வைத்திருப்பார்கள்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in