உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு காரசார வாதம்: அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி கிடைக்குமா?

உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு காரசார வாதம்: அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி கிடைக்குமா?

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரும் வழக்கில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இருதரப்பிலும் கடுமையான வாதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்து வருகிறார்கள்.

அதிமுக சார்பில் நாளை நடைபெற இருக்கும் பொதுக்குழுவிற்குத் தடைவிதிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் ராம்குமார் ஆதித்யன், சுரேன் பழனிசாமி, சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. “அதிமுக பொதுக்குழு தீர்மான ஏற்பாடு கூட்டத்தில் 23 வரைவுத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் அதிமுக தலைமை பதவிகள் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பொதுச் செயலாளர் பதவிக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் தற்போது அந்த பதவிகளை நீக்கிவிட்டு பொதுச் செயலாளர் பதவி கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிகிறது. கட்சியினரிடம் கலந்தாலோசிக்காமல் ஒற்றைத் தலைமை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வழக்கமான முறையில் பொதுக்குழு நடைபெறுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தலைமை மாற்றத்தைக் கொண்டுவரக்கூடாது” என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பில், “ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை விடப் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. கட்சியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு இருக்கிறது. பொதுக்குழுவின் முடிவுகளைக் காக்கின்ற அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். நாளை நடக்கும் கூட்டத்தில் எது நடக்கும், எது நடக்காது என்ற உத்தரவாதத்தை கொடுக்க முடியாது. மேலும் இதற்கு முன்பு கூட்டப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் எவ்வித அஜண்டாவும் குறிப்பிடப்படாமல் கூட்டப்பட்டது. பொதுக்குழுவின் பெரும்பான்மையான கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதுதான் ஜனநாயகம். பொதுக்குழுவிற்குப் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். சட்டவிதிகளின் படி பொதுக்குழு நடைபெறுவதால் , அதற்குத் தடை விதிக்கக்கூடாது” என வாதிடப்பட்டது..

இருதரப்பு வாதங்களை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in