`நான் சொல்வதை நிர்வாகிகள் கேட்கவில்லை’- இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரத்குமார் விளக்கம்

`நான் சொல்வதை நிர்வாகிகள் கேட்கவில்லை’-  இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரத்குமார் விளக்கம்

தேர்தலின் போது தனித்து போட்டியிடலாம் என தான் கூறுவதை நிர்வாகிகள் கேட்க மறுக்கின்றனர் என்றும் கட்சி நல்ல நிலைக்கு வராததற்கு தானே காரணம் என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தி. நகரில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ``ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்ல, கட்சியின் எதிர்க்கால திட்டம் குறித்து இன்று  நிர்வாகிகள் உடன் ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலைக்குள் ஈரோடு கிழக்கு தொகுதி நிலைபாடு குறித்து அறிவிக்கப்படும். கொங்கு மண்டலத்தில் சமகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. கடந்த தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகளில் எங்களின் பங்கீடும் உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் போட்டியிட விருப்பப்பட்டால் போட்டியிட தயார். தானும் பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளேன்.

தனித்து தேர்தலில் நிற்க வேண்டும் என்பது தான் தன் நிலைப்பாடு. ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் இணைந்தோம். எதிர்வரும் காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா இல்லை என்பதை ஆராய்ந்து தான் முடிவு எடுக்கப்படும்.

அதிமுக என்னும் மிகப்பெரிய இயக்கம் பிரிந்தாலே பலவீனம் அடைந்ததாகத்தான் அர்த்தம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான்ஆசை. அதிமுக பலவீனம் அடைந்துள்ளது. அதனால் தான் அதற்கு பின்னால் உள்ள கட்சிகள் வளர்ந்து வருகின்றன. ஈரோடு இடைத்தேர்தலால் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது'' என கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் படங்களை வாங்கி வெளியிடுவது கலைத்துறைக்கு நல்லது தான். ஒரு காலத்தில் படங்களை வாங்கவே ஆள் இல்லாத நிலை இருந்தது இன்று ஒருவர் வாங்கி வெளியிடுவது நல்லது.

இனி வரும் காலங்களில் மக்கள் நலனை முன் வைத்தே  சமகவின் அரசியல் பயணம் இருக்கும். கடந்த 16 வருடமாக சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம். தலைவன் சரியாக இருந்தால் தான் கட்சி சரியாக இருக்கும் என வெளிப்படையாக சரத்குமார் ஒப்புக் கொண்டார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in