`அடியாட்களோடு வந்து ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்'- ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் பாய்ச்சல்!

`அடியாட்களோடு வந்து ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்'- ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் பாய்ச்சல்!

அதிமுக பொதுக்குழு நடைபெறும் நேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு ஓபிஎஸ் சென்றார். அப்போது பூட்டப்பட்ட கதவை அவரது ஆதரவாளர்கள் உடைத்தெறிந்தனர். தலைமை அலுவலகம் உள்ளே சென்ற ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டு, வருவாய்த்துறை அலுவலர்களால் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு முடிவடைந்த நிலையில் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார், “வரலாற்றுச் சிறப்பு மிக்க பொதுக்குழுவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் ஒவ்வொரு தொண்டனும் வெட்கித் தலைகுனியும் நிலையை அவர் ஏற்படுத்தி இருக்கிறார். எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கியதுதான் தலைமைக் கழகம். எம்ஜிஆர் மாளிகை என்று சொல்லப்படும் தலைமைக் கழக அலுவலகத்தில், ஓபிஎஸ் தனது அடியாட்களோடு சென்று கடப்பாரைக் கொண்டு இடித்து ஆவணங்களையெல்லாம் கொள்ளையடித்துள்ளார். திமுகவின் கைக்கூலியாக இருந்து கொண்டு ஈனத்தனமான செயலை அவர் செய்து கொண்டிருக்கிறார். அதிமுகவின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தரம் தாழ்ந்த செயலை செய்திருக்கிறார்.

தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் உள்ளே நுழைவார்கள் என அதிமுக சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அதற்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. வைகோ அவர்கள் திமுகவிலிருந்து பிரிந்த போது அறிவாலயம் வழியாக ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டார். அப்போது அதிமுக ஆட்சியிலிருந்தது. கலவரம் ஏற்படும் என்பதால் அறிவாலயம் வழியாகச் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. ஓபிஎஸ்சை கைக்குள் வைத்துக் கொண்டு திமுக அதிமுகவிற்கு எதிராகச் செயல்படுகிறது. இங்கே நடைபெற்ற வன்முறையில் எங்கள் கட்சியினர் கடுமையாகக் காயமடைந்திருக்கிறார்கள். உருட்டுக்கட்டையை கொண்டு அதிமுக கொடியை அமைத்துள்ளார்கள். உருட்டுக் கட்டை கலாசாரத்தையா அதிமுக கொண்டுவந்திருக்கிறது?” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in