வருவாய்த்துறை சீல் வைத்த அதிமுக தலைமை அலுவலகம் வில்லங்கச் சொத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

வருவாய்த்துறை சீல் வைத்த அதிமுக தலைமை அலுவலகம் வில்லங்கச் சொத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை வில்லங்கச் சொத்தாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்காமல் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்குச் சென்றார். அவர் சென்ற வாகனம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வந்தபோது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை முன்னேறவிடாமல் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலரும் காயமடைந்தனர். ஒருவருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழக அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளே வர வழி செய்தனர். பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கிய ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளை வணங்கிவிட்டு உள்ளே சென்றார். அவரது ஆதரவாளர்கள் தலைமைக் கழகத்தை சுற்றிவைக்கப்பட்டிருந்த ஈபிஎஸ் பேனர்களைக் கிழித்தெறிந்தனர். தலைமைக் கழகத்தின் அனைத்து கதவுகளையும் அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்த வன்முறை காரணமாக வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடைக்கப்பட்ட கதவுகளைச் சரிசெய்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகார்கள் சீல் வைத்த நிலையில், இதனை வில்லங்கச் சொத்தாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகப் பிரச்சினை தீரும் வரை மயிலாப்பூர் வட்டாட்சியர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in