அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ்சிடம் எப்படி தரலாம்? : உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு!

அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ்சிடம் எப்படி தரலாம்? : உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு!

அதிமுக தலைமை அலுவலகச் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை வானகரத்தில், ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிப்பு செய்தார். அதேவேளையில் பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது பூட்டி வைத்திருந்த அதிமுக தலைமை அலுவலகத்தை அவரது ஆதரவாளர்கள் உடைத்தனர். இதனால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் வெடித்தது. இதையடுத்து அங்கிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

இந்த சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக அலுவலக சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமி வசம் சாவியை ஒப்படைக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டது. மேலும் ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தது. உயர் நீதிமன்ற கட்டுப்பாடு ஆக.7-ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது.

இந்த நிலையில் தொண்டர்களோடு ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்சிடம் கொடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in