கர்நாடகா ரிசல்ட்; பாஜகவின் பங்கைக் குறைக்குமா அதிமுக?

பிரதமர் மோடி, ஈபிஎஸ்
பிரதமர் மோடி, ஈபிஎஸ்கர்நாடக பாஜகவின் தோல்வியால் மகிழ்ச்சியில் அதிமுக?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வியால் எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம், தமிழகத்தின் பாஜக கூட்டணிக் கட்சியான அதிமுகவும் உள்ளூர மகிழ்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. பாஜகவின் இந்த தோல்வி மூலமாக வரும் மக்களவைத் தேர்தலில் தங்களின் பேரவலிமை அதிகரிக்கும் என்பது அதிமுகவின் கணக்கு என்கிறார்கள்.

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் தற்போது அக்கட்சி ஆட்சியை இழந்துள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-ல் வென்றது. தென்னிந்தியாவில் பாஜக இத்தனை அதிகமான தொகுதிகளில் வென்ற மாநிலம் இது மட்டும்தான். இதனைத் தவிர்த்து தென்னிந்தியாவில் தெலங்கானாவில் மட்டும் பாஜக 4 இடங்களில் வெற்றிபெற்றது. மற்றபடி ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவில் பாஜகவால் ஒரு தொகுதியிலும் வெல்லமுடியவில்லை.

மைசூரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்.
மைசூரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்.கர்நாடக பாஜகவின் தோல்வியால் மகிழ்ச்சியில் அதிமுக?

இதன் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாகவே கர்நாடகாவை மிக முக்கியமான மாநிலமாக பார்த்தார் பிரதமர் மோடி. இன்னும் சொல்லப்போனால் 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கட்சியினரை தயாராகச் சொல்லியிருந்தார் பிரதமர். அமித் ஷாவும் கடந்த இரு ஆண்டுகளாகவே பலமுறை கர்நாடகாவிற்கு வந்து கட்சியினருக்கு பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொடுத்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பிரதமர் மோடி 18 பேரணிகளில் உரையாற்றினார். இத்தனையையும் மீறி பாஜக அம்மாநிலத்தில் தோல்வியடைந்தது அக்கட்சியின் உயர்மட்ட தலைமையை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

பாஜகவின் கர்நாடக தோல்வியால் மகிழ்ச்சியில் அதிமுக!

கர்நாடக மாநில சட்டமன்றத்தில் பாஜகவின் தோல்வியை அதிமுகவினர் பலர் வரவேற்றதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. ஏனென்றால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அணுகுமுறை காரணமாக பாஜக – அதிமுக இடையேயான உறவு கடந்த சில மாதங்களாகவே சிக்கலில்தான் உள்ளது. இரு கட்சியின் தலைவர்களும் அடிக்கடி வார்த்தை மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறின. அண்ணாமலை அதிமுகவை வெளிப்படையாக விமர்சித்ததும், பதிலுக்கு அவரை ஈபிஎஸ் பகிரங்கமாக விமர்சித்ததும் அரசியல் களத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. டெல்லியின் சமரசத்துக்குப் பிறகே இந்த உரசல்களுக்கு ஒரு முடிவு வந்தது. இந்த நிலையில், அடிபட்ட பாம்பு போல காத்திருந்த அதிமுகவினருக்கு ஒரு வாய்ப்பாக கர்நாடக பாஜகவின் தோல்வி அமைந்துள்ளது.

அண்ணாமலை ஈபிஎஸ்
அண்ணாமலை ஈபிஎஸ்கர்நாடக பாஜகவின் தோல்வியால் மகிழ்ச்சியில் அதிமுக?

கர்நாடகாவில் ஆட்சியை இழந்துள்ள பாஜகவுக்கு தற்போது தென்னிந்தியாவில் பலமான ஒரே கூட்டணி கட்சியாக அதிமுக மாறியுள்ளது. பாஜகவை எதிர்க்க தேசம் தழுவிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து வரும் சூழ்நிலையில், கர்நாடக தோல்விக்குப் பின்னர் பாஜகவிடம் தங்களின் பேரவலிமை அதிகரித்துள்ளதாகவே அதிமுக பார்க்கிறது. உட்கட்சி பிளவுகளையெல்லாம் ஒருவாறு சரிகட்டி கட்சியின் ஒற்றைத் தலைமையாக ஈபிஎஸ் மாறியுள்ளார். இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் கணிசமான வெற்றியை காட்டவேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. உட்கட்சி சிக்கல்கள், அண்ணாமலையில் ஆக்ரோஷம் காரணமாக, வரும் மக்களவைத் தேர்தலில், தொகுதிப் பங்கீட்டில் பாஜக தலைமை தங்களுக்கு நெருக்கடி கொடுக்குமோ என்ற அச்சம் அதிமுகவுக்கு உள்ளூர இருந்தது. கர்நாடகாவின் பாஜக தோல்விக்கு பின்னர் ஈபிஎஸ் இனி பாஜகவை கொஞ்சம் தெம்பாக எதிர்கொள்வார் என்றே அக்கட்சியினர் சொல்கின்றனர்.

அதுபோல தமிழகத்தின் செயல்படும் ஒரே எதிர்க்கட்சி தாங்கள்தான் என்று அண்ணாமலையும் ஒருபக்கம் அனல் கிளப்பிக்கொண்டிருந்தார். இதனால் கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்த அண்ணாமலையையும் அம்மாநில தோல்விக்காக சமூக வலைதளங்களில் அதிமுகவினர் கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்து வருகின்றனர். 2024-ல் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க ஒவ்வொரு தொகுதியும் முக்கியம் என்பதால், பாஜகவுமே அதிமுகவை இனி கவனமாக எதிர்கொள்ளும் என்றே அரசியல் விமர்சகர்களும் கணிக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் கர்நாடக தேர்தல் முடிவுகள் இலை கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கர்நாடக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழ்நாட்டில் பாஜகவை தூக்கிச் சுமக்கும் அதிமுக, கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்றார். இந்தக் கருத்தும் தற்போது தமிழக அரசியலின் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஆவடிக்குமார்
ஆவடிக்குமார்கர்நாடக பாஜகவின் தோல்வியால் மகிழ்ச்சியில் அதிமுக?

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகி ஆவடிக்குமார், “ அதிமுக என்பது கொள்கை அடிப்படையில் செயல்படும் கட்சி. கூட்டணி கட்சிகளாக இருந்தாலும், எங்களுக்கும் பாஜகவின் கொள்கைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதனை பல நேரங்களில் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். எங்களின் எதிரிகள் எத்தகைய கூட்டணியை அமைத்துள்ளார்களோ அதனை எதிர்கொள்ளும் வகையில் நாங்களும் கூட்டணி அமைக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையிலேயே நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதில் மிகவும் தெளிவாக உள்ளோம். எனவே, எந்தவித தயக்கமும் இன்றி எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளோம்.

பாஜக கர்நாடகாவில் தோல்வியடைந்ததும், உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் வெற்றியடைந்ததும் அவர்கள் கட்சியின் பிரச்சினை. அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. அதற்கான விளைவுகளை அவர்கள் ஏற்பார்கள். எங்களுக்கு தமிழ்நாடு மட்டுமே களம். ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளில் சமரசம் செய்துகொள்ளாமல் அதிமுக இப்போதுவரை பயணிக்கிறது. அதிமுக குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துகளை எதிர்க்கவேண்டிய நேரங்களில் உடனுக்குடன் கடுமையாக எதிர்த்துள்ளோம். இந்தியாவிலேயே பாஜகவுடன் கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கட்சி அதிமுகதான். கர்நாடக தோல்விக்குப் பின்னர் பாஜக பலத்துடன் இருந்தாலும், பலவீனமாக இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலேயே கூட்டணி. அதனை ஏற்றுக்கொண்டால்தான் கூட்டணி என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

அதிமுக – பாஜகவின் கூட்டணியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “கர்நாடகாவில் பாஜக ஆட்சியை மட்டுமே இழந்துள்ளது. அதன் வாக்கு வங்கி, மக்கள் செல்வாக்கு அப்படியே உள்ளது. 38 ஆண்டுகளாகவே கர்நாடகாவில் ஆட்சி மாறி மாறியே வந்துள்ளது. அப்படித்தான் இப்போதும் ஆட்சி மாறியுள்ளது. எனவே, இது பாஜகவுக்கு பெரும் தோல்வியோ, மரண அடியோ கிடையாது.

எஸ். ஆர். சேகர்
எஸ். ஆர். சேகர்

தமிழக பாஜகவில் இதுவரை மிகப்பெரிய தலைவர்கள் இருந்தாலும் கூட, தற்போது அரசியல் ரீதியாக மக்கள் செல்வாக்கு வாய்ந்த தலைவராக அண்ணாமலை இருந்துவருகிறார். முன்பெல்லாம் தமிழகத்தில் மொத்தமுள்ள 66 ஆயிரம் பூத்களில் 25 ஆயிரம் பூத்களில் மட்டுமே பாஜக என்ற கட்சி இருந்தது. ஆனால் இப்போது, 60 ஆயிரம் பூத்களில் பாஜக கமிட்டி அமைப்பு ரீதியாக பலமாக உள்ளது. எனவே, பாஜகவின் பேர வலிமை முன்பைவிட இப்போது அதிகரித்துள்ளது. எங்கள் கூட்டணியின் அங்கமாக இருக்கும் அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு இப்போது மக்களை வசீகரிக்கும் தலைவர் இல்லை. ஆனால் பாஜகவில் மக்களை வசீகரிக்கும் தலைவராக அண்ணாமலை இருக்கிறார். ஏற்கெனவே இருந்த அதிமுகவும் இப்போது ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என பிரிந்துகிடக்கிறது. எனவே தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கு மட்டுமே பேர வலிமை உள்ளது.

கர்நாடகத்தில் ஏற்கெனவே இருந்த எம்எல்ஏ-க்களில் 40 சீட்களை பாஜக இழந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அண்ணாமலை பிரச்சாரம் செய்த இடங்களில் மட்டும் பாஜக தோற்றதாக சொல்வதில் உண்மையில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்ட 86 தொகுதிகளில் 39 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. அதாவது 50 சதவீதம் வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. எனவே கர்நாடக தேர்தல் முடிவுகள், வரும் மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்காது” என்றார்.

கர்நாடக தேர்தலுக்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பாஜக தங்களை விட்டால் போதும் என்ற மனநிலையில் தான் அதிமுகவில் பெரும்பகுதியினர் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் கர்நாடக தேர்தல் முடிவுகள் இனிப்பான செய்தியைத் தந்திருக்கிறது. இதை வைத்து, தமிழகத்தில் பாஜகவுக்கு ஒதுக்கும் தொகுதிகளை குறைக்க வேண்டும். அதற்கு ஒத்துவராவிட்டால் அவர்களை கூட்டணியை விட்டு கழற்றிவிட்டாலும் தப்பில்லை என்ற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அத்தகையை முடிவை எடுக்கும் தைரியமும் துணிச்சலும் ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைகளுக்கு வருமா என்பது தான் கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in