தொடங்கியது அதிமுக பொதுக்குழு... ஈபிஎஸ் உற்சாகம்: பாதுகாப்புடன் வந்த ஓபிஎஸ்

தொடங்கியது அதிமுக பொதுக்குழு... ஈபிஎஸ் உற்சாகம்: பாதுகாப்புடன் வந்த ஓபிஎஸ்

மிகுந்த எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் தொண்டர்களின் பலத்த கோஷங்களுடன் தொடங்கியது. மண்டபம் முழுவதும் ஓபிஎஸ்சுக்கு எதிராகக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலையில் தொடங்கியுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் அந்த மண்டபத்திற்கு வந்துள்ளனர். அதிமுக பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பிலும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதால் அவர்களின் முழக்கங்களே மண்டபத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனிடையே மேடையில் அமர்ந்திருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களை நோக்கி ‘துரோகியே வெளியேறு’ என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதையடுத்து, மேடையிலிருந்த வைத்தியலிங்கம் தனது இருக்கையிலிருந்து கீழே சென்றுவிட்டார்.

ஓபிஎஸ் மண்டபத்தை வந்தடைந்ததும் மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. வளர்மதி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தொண்டர்களைச் சமாதானப்படுத்தினர். அவரது காரை வெளியேற்றுமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஓபிஎஸ் வருகையை அடுத்து எடப்பாடி பழனிசாமி மண்டபத்திற்கு வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் ‘நிரந்தரப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க’ என கோஷமிட்டு வரவேற்றனர். ஒற்றைத் தலைமை குறித்து மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் ஓபிஎஸ்ஸை முற்றுகையிட்டு அவரை வெளியேற்றும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஈடுபட இருக்கிறார்கள். இதனால் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் போகலாம் என்ற கருத்தும் பரவலாக நிலவிவருகிறது.

முதலில் ஈபிஎஸ் மேடை ஏறினார். அவரை தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியில் முழக்கமிட்டனர். பதிலுக்கு இரட்டை இலை சின்னத்தை காட்டி தனது உற்சாகத்தை ஏற்படுத்தினார் ஈபிஎஸ். இதன் பின்னர் பாதுகாப்புடன் ஓபிஎஸ் வந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in