
அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் தகுதிகள் குறித்து அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவிற்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் அடிப்படையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரட்டைத் தலைமை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பதவி வகித்த நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவிக்கு நான்கு மாதத்தில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்களில் வாயிலாக அதிமுக பொதுச் செயலாளர் வேட்பாளருக்கான தகுதிகளையும் அதிமுகவின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராகப் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் இருந்தால் போதும் என்ற விதி மாற்றப்பட்டு, தற்போது, தொடர்ந்து பத்து ஆண்டுகள் அதிமுகவில் இருந்திருக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகள் அவர்கள் தலைமைக் கழக பொறுப்பில் இருந்திருக்க வேண்டும் எனவும், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுபவர்களுக்கு பத்து மாவட்ட செயலாளரை முன்மொழிய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்ட செயலாளர் ஒரு பொதுச் செயலாளர் வேட்பாளருக்குத்தான் வழிமொழிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்கள் யாவும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.