`பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்கினால் இந்த பிரச்சினை ஏற்படும்'- ஆவடி காவல் ஆணையரிடம் ஓபிஎஸ் திடீர் மனு!

`பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்கினால் இந்த பிரச்சினை ஏற்படும்'- ஆவடி காவல் ஆணையரிடம் ஓபிஎஸ் திடீர் மனு!

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து எழுந்துள்ள பிரச்சினையின் காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பினரும் கட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து வரும் 23-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறார். மேலும் பொதுக்குழுவிற்கு அனுமதி வேண்டியும், பாதுகாப்பு அளிக்க கோரியும் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் அவர்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் தங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதிமுக பொதுக் குழுவிற்கு அனுமதி தரக் கூடாது என ஓபிஎஸ் சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் எனத் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “18.06.2022 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. மேலும் கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் கூட்டம் நடத்தக்கூடாது எனச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலையும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. கட்சி விதிகளுக்கு முரண்பாடாக இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதால், கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பிலும் எதிரெதிர் கருத்துகளுடன் கொடுக்கப்பட்ட மனுக்களால் காவல்துறையினர் அனுமதி வழங்கும் முடிவைத் தள்ளி வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in