ஜூலை 11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு புது சிக்கல்!

ஜூலை 11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு புது சிக்கல்!

ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கல்லூரிகளில் பொதுக்குழு நடைபெற அனுமதி இல்லை என்பதால் தற்போது மாற்று இடத்தை தேடி அவர்கள் அலைந்து வருகிறார்கள்.

அதிமுக பொதுக்குழு வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில்தான் எப்போதும் நடைபெறும். ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அறிவித்த நிலையில் அந்த மண்டபத்தில் தேதி கேட்டு, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மண்டப நிர்வாகியை அணுகி இருக்கிறார்கள். ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் வாரத்தில் பல்வேறு திருமணங்கள் நடைபெற இருப்பதால் அதிமுக நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வேறு இடங்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “துரோகத்தின் அடையாளமாக ஓபிஎஸ்சை சொல்லலாம். ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா, இல்லையா என்பது 11-ம் தேதிக்குப் பிறகு தெரிந்துவிடும்” என்றார்.

மேலும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கு இடத்தை தேர்வு செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்ர், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னை ஓஎம்ஆர் பகுதியில் உள்ள இரண்டு தனியார் மண்டபங்களையும் அவர்கள் பார்வையிட உள்ளனர். போக்குவரத்து வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பிறகு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் இடத்தை தேர்வு செய்ய உள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி, மத, இயக்க செயல்பாடுகள் மற்றும் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ்சின் பயிற்சி முகாம் நடந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அந்த பள்ளிக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கமும் பெறப்பட்டது. இந்த நிலையில்தான் அதிமுக நிர்வாகிகள் அரசு நிதி உதவி பெறும் ஜெயின் கல்லூரி மைதானத்தில் ஆய்வு செய்துள்ளனர். அந்தக் கல்லூரியில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டுமானால் உயர் கல்வித்துறை அனுமதி பெறவேண்டிய நிலை ஏற்படும். உயர் கல்வித்துறை அனுமதி வழங்க வாய்ப்பு இல்லை என உயர் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in