
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை நாளை(ஆக.11) காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னையில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணனும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குருகிருஷ்ணகுமாரும் ஆஜராகினர்.
இதில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான விஜயநாராயணன், கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கியபோதும் தேர்வு முறையில் மாற்றமில்லை. பொதுக்குழுவுக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்று வாதிட்டார்.
இதனைக் கேட்டநீதிபதி, பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து விளக்கம் தர வேண்டும் என அறிவுறுத்தினார். அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன் என்பது குறித்தும் விளக்க வேண்டும் என உத்தரவிட்டார். தமிழ் மகன் உசேன் கட்சி விதிகளின்படி நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்டாரா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கடந்த ஜூன் 23-ம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து கையெழுத்திட்டதன் அடிப்படையில் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர், பொதுக்குழுவில் இருந்து ஒபிஎஸ் வெளியேறிய பிறகுதான் தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக அறிவிக்கப்பட்டதாக விளக்கமளித்தார். கடந்த 2017-ம் ஆண்டு கட்சி விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். 2016-ம் ஆண்டு சசிகலா சிறை சென்றதால், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று 2017-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டப்பட்டது என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இவ்வழக்கு விசாரணையை நாளை (ஆக.11) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.