ஓபிஎஸ் தரப்பு மனுவை விசாரிக்க மறுப்பு... வானகரத்தில் விறுவிறு பணி: பொதுக்குழு நடத்த தயாராகும் ஈபிஎஸ் டீம்

ஓபிஎஸ் தரப்பு மனுவை விசாரிக்க மறுப்பு... வானகரத்தில் விறுவிறு பணி: பொதுக்குழு நடத்த தயாராகும் ஈபிஎஸ் டீம்

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் நடைபெற உள்ளது. பொதுக்குழுவிற்குத் தடை விதிக்க கோரிய வழக்கை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், பொதுக் குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடிக்கத் தொடங்கிய நிலையில், ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் களேபரத்தில் முடிந்தது. அப்போது நிறைவேற்றத் தயாராக இருந்த 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வில்லை. மேலும், அந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தரப்பினரும், சட்டப்படி பொதுக் குழுக் கூட்டம் செல்லும் என ஈபிஎஸ் தரப்பினரும் பொதுவெளியில் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். பொதுக்குழுக் கூட்டத்தில் தற்காலிக அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். பொதுக் குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், பொதுக் குழு நடைபெறுவதற்கு ஸ்ரீ வாரு மண்டபம் சார்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுக் குழு நடத்தும் இடத்தை தேர்வு செய்வதற்காக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீ வாரு திருமண மண்டப உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தநிலையில், ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவை அந்த மண்டபத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. கரோனா நோய் தொற்று காரணமாக மண்டபத்தின் உள்ளே நிகழ்ச்சி நடைபெறாமல், வெளியே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் பொதுக் குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, ”ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது'' எனத் தெரிவித்தனர். இதையடுத்து உற்சாகமான ஈபிஎஸ் தரப்பினர், பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளில் தீவிரம் செலுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in