எழுத்துபூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ், ஈபிஎஸ்சுக்கு ஐகோர்ட் உத்தரவு

எழுத்துபூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ், ஈபிஎஸ்சுக்கு ஐகோர்ட் உத்தரவு

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்ததோடு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் சிலரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், "ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும் 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ் தரப்பில், " ஓபிஎஸ் நலனுக்காக தனிநீதிபதி தீர்ப்பளித்துள்ளார். பொதுக்குழுதான் கட்சியில் அதிகாரம் மிக்கது. தனி நீதிபதி அளித்த தீர்பால் அதிமுகவின் கட்சி நடவடிக்கைகள் முடங்கும் அபாயம் உள்ளது." என வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, "அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். அடிப்படை உறுப்பினர்களை விடப் பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்பதை ஏற்க முடியாது" என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையைப் பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மதியம் 2.30 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்புக்கு மத்தியில் காரசார வாதம் தொடர்ந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த வழக்கின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். அதே நேரம் இருதரப்பினரும் எழுத்துப் பூர்வமான வாதங்களை நாளை மாலைக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். நாளை அவர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை முன்வைக்கும் நிலையில் அடுத்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in