சோதனை மேல் சோதனை: அதிரும் அதிமுகவினர், கலக்கத்தில் அதிகாரிகள்

சோதனை மேல் சோதனை:
அதிரும் அதிமுகவினர், கலக்கத்தில் அதிகாரிகள்

முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகளும், நடத்தப்படும் சோதனைகளும் அதிமுக வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. கூடவே, முறைகேடுகளுக்குத் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் அதிகாரிகளும் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கடந்த 2016 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியின்போது பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள்; கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்மங்கள் போன்றவை குறித்தும் பல்வேறு அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.

சொல்லி அடிக்கும் ஸ்டாலின்

2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் ஜெயலலிதா மரணம் குறித்தும், கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்தும் மேல் விசாரணை நடத்தப்படும்” என்றும், “அதிமுக ஆட்சியின்போது ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சூளுரைத்தார்.

தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைந்த நிலையில், மேலும் 6 மாதகாலம் அதை நீட்டித்திருக்கும் திமுக அரசு, 6 மாதகாலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

மேலும் அதிமுக ஆட்சியின்போது ஆறுமுகசாமி ஆணையத்திற்குக் கால நீட்டிப்பு மட்டுமே நடந்ததாகவும், விசாரணை ஏதும் நடைபெறவில்லை என்றும் அரசுத் தரப்பு குற்றம்சாட்டியிருக்கிறது. மேலும் கோடநாடு சம்பவம் குறித்த வழக்கில் மேல் விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து தற்போது அந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

அதிமுக ஆட்சியின்போதே அமைச்சர்கள் மீது வந்த ஊழல் புகார்கள் மீது எடப்பாடி பழனிசாமி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது அதிமுக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். அத்துடன், வழக்குப் பதிவுசெய்யப்பட்ட அமைச்சர்கள், அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

மேலும் இதுபோல் பல்வேறு துறைகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், அமைச்சர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விஷயத்தில் திமுக அரசு காட்டும் வேகத்தைப் பார்த்து அதிமுக தலைமை அதிர்ந்துபோயிருக்கிறது. அவர்களுடன் ஊழக்கு துணைபோனதாகக் கருதப்படும் அதிகாரிகளும் கலக்கத்தில் இருக்கிறார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in