அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டால் எடப்பாடியார் தலைமைக்கு எதிர்ப்பு வருமா? - வைகைச்செல்வன் பேட்டி

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் இப்போது மக்களே விரும்பி , தன்னெழுச்சியாக எடப்பாடி பழனிசாமிக்காக திரள்கிறார்கள் என்கிறார் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வன்.

இந்தத் தேர்தலை ஜெயலலிதா பாணியில் கிட்டத்தட்ட தனித்தே நின்று சந்தித்திருக்கிறது அதிமுக. வேட்பாளர்கள் தேர்வில் கூட துணிச்சலாக புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் இபிஎஸ். அவரைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வாழ்வா வீழ்வா பிரச்சினைதான். அதிமுக வென்றால் அவரைக் கொண்டாடு வார்கள். ஒருவேளை, அது நடக்காமல் போனால் அவர் மீது பழிபோடவும் ஒரு தரப்பு தயாராய் இருக்கும். இந்த நிலையில், மக்களவைத் தேர்தல், அதிமுகவின் பரப்புரை, திமுகவின் செயல்பாடு, பாஜகவின் தாக்கம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் பேசினோம்.

அதிமுகவின் தேர்தல் பரப்புரைக்கு மக்களின் ஆதரவு எப்படி இருந்தது?

நான் அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் பரப்புரைக்காக சென்றேன். எல்லா இடங்களிலும் பொதுமக்கள், இளைஞர்கள், நடுநிலையாளர்களிடம் அதிமுகவுக்கான ஆதரவு அபரிமிதமாக பெருகியுள்ளது. அதேசமயம், மக்களுக்கு திமுக ஆட்சி மீது அதிகளவில் வெறுப்பு இருப்பதையும் பார்க்க முடிந்தது. திமுக, கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பி நிற்கிறது. ஆனால் மக்கள், எங்கள் மீதுதான் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை கண்கூடாகப் பார்த்தோம்.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி என தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறதா?

களத்தில் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி. பாஜக கூட்டணி அமைத்திருக்கும் கட்சிகளுக்கெல்லாம் வாக்கு சதவீதமே கிடையாது. அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே முடியாது என்பதே கள நிலவரம். பாஜக வளர்ந்துவிட்டது, வாக்கு சதவீதம் கூடிவிட்டது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.

வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். எங்கேயாவது கோவை, கன்னியாகுமரி என ஒரு பகுதியில் மட்டும் வளர்ந்திருப்பதாக சொல்வது வளர்ச்சியல்ல; அது வீக்கம். எனவே, பாஜகவால் இந்த தேர்தலில் எதுவும் செய்யமுடியாது. அந்த கட்சிக்கு மக்கள் இந்த தேர்தலில் நல்ல பாடத்தை கற்பிப்பார்கள்.

மோடி ரோடு ஷோ
மோடி ரோடு ஷோ

பெரிய கட்சியே பாஜக அணியில் இல்லை என்கிறீர்களே... பாமக பெரிய கட்சிதானே?

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதால் பாமக தொண்டர்களே இந்த தேர்தலில் அந்த கட்சி மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். பாமகவின் அரசியலே ஒட்டுண்ணி அரசியல்தான். கடைசிவரை ஒரு கட்சியுடன் இருந்து அக்கட்சியின் சத்தினை உறிஞ்சிக்கொண்டு, மீண்டும் சத்தான இன்னொரு பக்கம் அந்தக் கட்சி ஒட்டுண்ணி போல தாவுவதால் பாமக தொண்டர்களே இம்முறை அதிருப்தியில் உள்ளனர்.

இதேபோல 20 ஆண்டுகளாக செய்துவருவதால் பாமக இமேஜ் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. மற்றொரு பக்கம், அக்கட்சி தன்னை சாதிகட்சியாக சுருக்கிக்கொண்டுவிட்டது. அவர்களின் சமூகத்தினரே இப்போது பாமகவை கைவிட்டு விட்டனர்.

எப்படி பார்த்தாலும் திமுக கூட்டணி பலம் பொருந்தியதாக இருக்கிறதே... உங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி?

சுமார் 10 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக போன்ற கட்சிகள் பயணிக்கின்றன. ஆனால், பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, கள்ளச்சாராய மரணம் என திமுக அரசின் மக்கள் விரோத செயல்களையெல்லாம் அவர்கள் கேள்வி கேட்பதே இல்லை. முழுமையாக திமுகவின் அங்கமாகவே அந்த கட்சிகள் மாறிவிட்டன. எனவே, இந்தக் கூட்டணி மொத்தமாக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. அது இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவும், பாஜகவும் இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டி போடுகின்றன என்கிறதே திமுக?

அதீத கற்பனையில் திமுக பேசுகிறது. சமூக நீதி, சமத்துவம், விளிம்புநிலை மக்களின் உயர்வுக்காக போராடுவதற்காக தொடங்கப்பட்ட திமுக இப்போது கார்ப்பரேட் கம்பெனியாக, குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. பணம் வைத்திருப்பவர்களே அந்தக் கட்சியில் கோலோச்சலாம் என்ற நிலை வந்துவிட்டது. இரண்டாம் இடத்துக்கு திமுக, பாஜக இடையேதான் போட்டி என நாங்கள் சொல்கிறோம்.

பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறதே?

கருத்துக்கணிப்புகள் சொல்வதெல்லாம் உண்மையல்ல. பரப்புரையில் மக்கள் அதிமுகவுக்கே பெரும் வரவேற்பை அளித்தனர். இதனால் இம்முறை மக்களின் ஏகோபித்த ஆதரவு எங்களுக்கே கிடைக்கும். எனவே கருத்துக்கணிப்பு களையெல்லாம் பொய்யாக்கி அதிமுகவுக்கே வெற்றி வசமாகும்.

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக நின்றார். அது நல்ல முடிவாக இப்போது தெரிகிறதா?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதை பாருங்கள். 2024-க்குப் பிறகு அதிமுகவே இருக்காது என்கிறார். அதிமுக ஓபிஎஸ், தினகரன் கைகளுக்குச் சென்றுவிடும் என்கிறார். இவரோடு பயணித்திருந்தால், அதிமுகவுக்கு கிடைத்த ஓட்டும் செல்வாக்கும் எங்களால் கிடைத்த செல்வாக்குதான் என்று சொல்லியிருப்பார். அதிமுகவே எங்களால்தான் வெற்றிபெற்றது என்று சொல்லியிருப்பார். அதிமுக உயிர்வாழ காரணமே நாங்கள்தான் என்று சொல்லியிருப்பார். என்னதான் செய்தாலும் பாஜகவால் நோட்டாவை தாண்டவே முடியாது. தங்களின் நிலையை அவர்கள் இந்தத் தேர்தலில் உணருவார்கள்; அண்ணாமலையும் உணருவார்.

பாஜக – அதிமுக இடையே கள்ள உறவு இருப்பதாக திமுக தொடர்ந்து விமர்சனம் வைக்கிறதே?

தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் சரி, நிர்வாகிகளும் சரி பாஜக மீது பல்வேறு கடும் விமர்சனங்களை முன்வைத்தோம். திமுகதான் அப்போது ‘கோபேக் மோடி’ என்று சொல்லிவிட்டு, இப்போது ‘வெல்கம் மோடி’ என்கிறது. திமுகதான் பாஜகவோடு மறைமுக உறவு வைத்திருக்கிறது.

தேர்தல் பரப்புரையில் வைகைச்செல்வன்
தேர்தல் பரப்புரையில் வைகைச்செல்வன்

எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் மிக எழுச்சியோடு பொதுச்செயலாளரை வரவேற்றார்கள். செல்லுமிடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து அவரை வரவேற்றதை பார்த்தோம். இது ஒரு புதிய மாற்றம். சாதாரண தொண்டராக இருந்தவர்கூட கட்சியின் பொதுச்செயலாளராகி அந்தக் கட்சியை திறம்பட நடத்தலாம் என்று வரலாற்று செய்தியை உலகுக்கே காண்பித்துக்கொண்டிருக்கிறது அதிமுக.

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் வழியில் இப்போது இபிஎஸ்சை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

எம்ஜிஆர் போல ஒரு தலைவர் வரவே முடியாது என்று அப்போது சொல்லப்பட்டது. அதன்பின்னர் ஜெயலலிதா வந்து அவரும் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றார். அதேபோல எடப்பாடி பழனிசாமியால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள். அவருக்கு மக்களை ஈர்க்கும் திறமை இருக்கிறதா என்று கேட்டார்கள். ஆனால், 4 வருடங்கள் 3 மாதங்கள் ஆட்சியை திறம்பட நடத்தியும், இப்போது 3 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக அதிமுகவை வழிநடத்தியும் மக்களின் நம்பிக்கையை அவர் பெற்றுள்ளார்.

இதனால்தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் அவருக்கு ஆதரவு தந்துள்ளனர். என்னதான் நாம் வலிய அழைத்தாலும், மக்கள் விருப்பம் இல்லாமல் பிரச்சாரங்களுக்கு வர மாட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இதனை அனுபவத்தில் பார்த்தோம். சிலரின் வருகைக்கெல்லாம் என்னதான் கூப்பிட்டாலும் கூட்டமே வராது. ஆனால், இப்போது மக்களே விரும்பி , தன்னெழுச்சியாக எடப்பாடி பழனிசாமிக்காக திரள்கிறார்கள், அதை கண்கூடாக பார்க்கிறோம்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

இபிஎஸ் தனியாக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. ஒருவேளை, இத்தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டால் அவரின் தலைமைக்கு ஆபத்து வரலாம் சொல்லப்படுகிறதே?

தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும். இதுவே தத்துவம். 3 மாதம்தான் ஆட்சியில் நீடிப்பார், ஆறுமாதம் தான் ஆட்சி என பலரும் சொன்னார்கள். ஆனால், தனது சாமர்த்தியம், ராஜ தந்திரத்தால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல ஆட்சியிருக்கும்போது எப்படியோ ஓட்டிவிட்டார்கள். எதிர்க்கட்சியாகவெல்லாம் எடப்பாடி பழனிசாமியால் சமாளிக்க முடியாது என சொன்னார்கள். இப்போது 3 ஆண்டுகளாக திறம்பட கட்சியை வலிமையோடு நடத்தி வருகிறார். எனவே, தகுதியுள்ளவர்களை யாராலும் எதுவும் செய்யமுடியாது. அவர் மகத்தான வெற்றிபெறுவார்.

அதிமுக எத்தனை தொகுதிகளில் வெல்லும்? பாஜகவுக்கு என்ன கிடைக்கும்?

எங்களுக்கு இரட்டை இலக்கத்தில் 20 தொகுதிகள் கிடைக்கும், 40 தொகுதிகளும் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பாஜக குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை வேண்டுமானால் பெறலாம். ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in