`அவர் ஒரு வழிப்போக்கர்; நேரத்தை வீணாக்காதீர்கள்'- யாரை கடுமையாக விமர்சிக்கிறார் ஜெயக்குமார்

`அவர் ஒரு வழிப்போக்கர்; நேரத்தை வீணாக்காதீர்கள்'- யாரை கடுமையாக விமர்சிக்கிறார் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை, திமுக அரசு, ஓபிஎஸ் ஆகியவை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை, கொள்ளை கூட்டுப் பாலியல் பலாத்காரம், அதுபோல தனி மனிதனுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை நிலவுகின்ற நிலை உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதி எதுவும் செய்யப்படவில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள். குடிநீர், சாலை, மின்சார வசதி, கழிவு நீர் செல்லக்கூடிய வசதி அதுபோல அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். இந்த இரண்டு விஷயங்களைத்தான் மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த ஒரு வருடம் இந்த விடியா திமுக அரசு கவனம் செலுத்துவது கிடையாது. இரண்டு விஷயத்தில் மட்டும்தான் அவர்கள் கவனம் முழுக்க உள்ளது.

ஒன்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி என்ற ஒரு பேர்ரார்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. அந்த வகையில் அவர் தினந்தோறும் ரிப்பன் கட் செய்யும் பணியைத்தான் செய்து வருகிறாரே தவிர வேறு எந்த வேலையையும் செய்வது கிடையாது. நாங்கள் எங்கள் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக எடப்பாடியார் ஆட்சி காலத்திலே அன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கப்பட்ட திட்டங்களை எல்லாம் ரிப்பனை கட் செய்து லேபிள் ஒட்டும் வேலையைத்தான் இன்றைக்கு செய்துகொண்டிருக்கிறார். இரண்டாவது அவரின் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும். அந்த முனைப்பை இன்றைக்குக் காட்டி வருகிறார். விளம்பரப்படுத்துவது ஒரு பக்கம். தன்னுடைய மகனுக்கு பட்டாபிஷேகம் செய்யும் அந்த எண்ணத்திலே இருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது. இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். இதுவரை தரவில்லை. ஒவ்வொரு முறையும் தருவோம், தருவோம் என்று சொல்கிறார்கள். எப்போது தருவார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தருவீர்களா நீங்கள். காஸ் சிலிண்டருக்கு மானியம் தருவோம் என்று சொன்னீர்கள். அதுவும் தரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று சொன்னார்கள். இதற்கும் எந்த பதிலும் இல்லை. நீட் வரவே வராது. ஒரு கையெழுத்தில் இதனை முடித்துவிடுவோம் என்று சொன்னீர்கள். இதையும் முடிக்கவில்லை. இதுபோன்று 500 வாக்குறுதிகளைச் சொன்னீர்கள். மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை இந்த விடியா அரசு நிறைவேற்றவில்லை.

மக்கள் எதிர்பார்க்காத வாக்குறுதிகளைச் சிலவற்றை நிறைவேற்றிவிட்டு, நாங்கள் நிறைவேற்றிவிட்டோம், நிறைவேற்றிவிட்டோம் என்று மார்தட்டி விளம்பரப்படுத்தி அதன்மூலம் கோயபல்ஸ் பிரச்சாரத்தைச் செய்துவருகிறது இந்த விடியா திமுக அரசு. இவையற்றை எல்லாம் செய்து மக்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு வழக்குப் போடவேண்டும், அதிமுகவை அழிக்கவேண்டும், முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்குப் போடவேண்டும், கழக முன்னோடிகள் மீது பொய் வழக்கு போடவேண்டும், இதுபோன்ற பணிகளைத்தான் இந்த ஒரு வருடமாகச் செய்து வருகிறார்கள்.

தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர்கள் மீது காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு, ரெய்டு என்ற போர்வையிலே முன்னாள் அமைச்சர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம், அவரின் கழக பணிகளில் தொய்வை ஏற்படுத்தி, அதன் மூலம் கழகத்தை இல்லாமல் ஆக்கிவிடலாம் என்றால் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நினைக்குமாம் அதுபோலத்தான் இதுவும். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அம்மா மீது ஏகப்பட்ட வழக்குகள். அதேபோல 72-ல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கழகத்தை ஆரம்பிக்கும்போது எவ்வளவு அடக்குமுறைகள், தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உதயகுமார், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் இறந்துபோனார். வத்தலகுண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாரன் இவர்கள் அனைவரும் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம். இப்படி அடக்குமுறைகளைத் தாண்டி, வழக்குகளை எல்லாம் தாண்டி, நீதிமன்றத்தை சந்தித்து ஒரு புடம் போட்ட தங்கமாக அதிமுக ஜெலித்தது. இப்படி வழக்குகள் மூலம் அழித்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் ரெய்டு நடக்கிறது. 49 இடங்களில் ரெய்டு நடக்கிறது. உறவினர் இருக்கக்கூடாதா. அவருக்கு நண்பர் இருக்கக்கூடாதா. அவரை அசிங்கப்படுத்த வேண்டும், கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அவருடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு ரெய்டு நடத்தி களங்கம் கற்பிக்கவேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது.

அதிமுக என்பது அமுக்க முடியாத ஒரு பந்து. தண்ணீரில் பந்தை அமுக்க முடியுமா. அது மேலதான் வரும். அதுபோல எத்தனை அடக்குமுறை வந்தாலும் சரி நீதிமன்றத்தில் சந்திப்போம். வேலூர் மாவட்ட செயலாளர் ஒரு மக்கள் பணி செய்தால் அவர் மீதும் ஒரு வழக்கு போடுகிறார்கள். ஜனநாயக கடமையை செய்யவிடாமல் தடுத்த ஒரு ரவுடியை பிடித்து அளித்ததற்கு என் மீது நான்கு வழக்கு. கிட்டதட்ட 25 பிரிவுகளின் கீழ் வழக்கு. எப்படிப்பட்ட கொடுங்கோன்மையான அரசு இன்றைக்குத் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது. கழக முன்னோடிகள் மீது வழக்கு போட்டு அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அது பூனை பகல் கனவு கண்டதுபோலதான் ஆகும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இதற்கு சரியான தீர்ப்பை வழங்குவார்கள்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:

ஒரு புறம் முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு, மறுபுறம் அதிமுக நிர்வாகிகள், அவர்களின் ஆதரவாளர்கள் குறிப்பாக சந்திரசேகர் ஆகியோர் மீது ஐடி ரெய்டு நடத்துவது குறித்து உங்கள் கருத்து.

வருமானவரித்துறையானாலும் சரி, லஞ்ச ஒழிப்புத் துறையானாலும் சரி, நீதிமன்றம் என்று ஒன்று உள்ளது. நிச்சயமாக அங்கு நீதியை நிலைநாட்டுவார்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணி என்றால் நான் பதில் சொல்ல முடியும். சந்திரசேகர் ஒரு தொழில் செய்பவர்.

லஞ்ச ஒழிப்புதுறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித்துறையும் சோதனை நடத்துகிறதே. இதனை எப்படி பார்க்கிறீர்கள்.

எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். அனைத்தையும் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம்.

இது உங்களுக்கான நெருக்கடி (கட்சிக்கு) என்று நினைக்கிறீர்களா?.

லஞ்ச ஒழிப்புத்துறை முடுக்கிவிட்டு, பொதுக்குழு நடக்கும் நேரத்திலே மக்களைத் திசை திருப்பும் வேலையைச் செய்துவருகிறது. திமுக அட்டகாசங்கள், மக்கள் விரோத போக்கை யாரும் பேசக்கூடாது. அப்படி பேசாமல் இருக்கவேண்டும் என்றால் ரெய்டு என்ற ஆயுதத்தை எடுப்பதுதான் இவர்கள் வேலை.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து பேசினார். இப்போது நடக்கும் ரெய்டுக்கு அவர்கள் தரப்பிலிருந்து தூண்டிவிட்டுள்ளார்கள் என்று நினைக்கிறீர்களா?.

நீங்கள் குறிப்பிடும் நபர் ஒரு பொருட்டே இல்லை. அவருக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் என்ன பேசுகிறார் என்று சொல்லுங்கள் நான் பதில் சொல்கிறேன். எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்கள் யார் கேட்டாலும் நான் பதில் சொல்கிறேன். யாரோ ஒரு வழிப்போக்கர் பேசுகிறார். அவருக்காக நேரத்தை வீணாக்காதீர்கள்.

இதுபோன்ற சோதனைகள் மூலமாக அதிமுகவை அச்சுறுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

1972-ம் ஆண்டிலிருந்து நாங்கள் ( கழகம்) பார்க்காத அடக்குமுறை கிடையாது. அனைத்து வழக்குகளையும் சந்தித்து, அவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கி பெரிய அளவுக்கு சரித்திரம் படைத்தது அதிமுக. என் மீது நான்கு வழக்குகளைப் போட்டார்கள். ஒரு வழக்கு முடிந்துவிட்டது. இன்னும் மூன்று வழக்குகள் உள்ளன. சிறையில் அடைத்தால் அடங்கி ஒடுங்கிவிடுவார்களா. இன்னும் குரலை உயர்த்தி பேசுவோம். உலகத்திற்கே எங்கள் குரல் கேட்பதுபோல பேசுவோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in