`4 பேரை வைத்து அவர் கட்சி நடத்துகிறார்; ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி என்று போடாதீங்க'- ஜெயக்குமார் அட்வைஸ்

`4 பேரை வைத்து அவர் கட்சி நடத்துகிறார்; ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி என்று போடாதீங்க'- ஜெயக்குமார் அட்வைஸ்

4 பேரை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் கட்சி நடத்துகிறார். இதனால் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என்று போடாதீங்க என்று ஊடகங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை அதிமுக அடையும். புரட்சித்தலைவி ஜெயலலிதா சொன்னது போல நாற்பதும் நமதே நாடு நமதே என்கிற அடிப்படையிலேயே ஒரு வரலாற்றை படைக்கின்ற இயக்கம் அதிமுக. அது மட்டுமில்லாமல் 2026-ல் சட்டமன்ற தேர்தல் வரும்போது அதிமுக மகத்தான வெற்றி பெற்று அதன் மூலம் புரட்சித்தலைவர் எம்ஜிஆருடைய ஆட்சியை புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு தமிழ்நாட்டிலேயே மலரும். அக்டோபர் 17-ம் தேதி (இன்று) என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் திருநாள். இந்த திருநாளில் இன்றைக்கு அதிமுக விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அண்ணன் எடப்பாடியார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து இன்று இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று சிறப்பாக கட்சியை நடத்தி வருகிறார். இந்த எழுச்சி தலைமை அலுவலகத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு எங்கும் பட்டிதொட்டி எங்கும் எழுச்சி காணப்படுகிறது" என்றார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், "ஏற்கெனவே பலமுறை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்குவது என்பது எண்ணிக்கையில் அடிப்படையில்தான் செயல்பட வேண்டும். அதிமுகவை பொருத்தவரை 65 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஓபிஎஸ் தரப்பில் 4 பேர் மட்டுமே இருக்கிறார்கள். 65 பேர் ஒட்டுமொத்தமாக இருக்கும்போது சட்டமன்ற அதிமுக குழு தலைமை எடுத்த முடிவின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு ஒன்றுபட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை எங்களுக்கு தான் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடிதத்தை கொடுத்திருந்தோம். ஜனநாயக மாண்புடையவராக சபாநாயகர் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அந்த கடிதத்திற்கு மதிப்பளித்து எங்களுக்கு உரிய உரிமை அளிப்பதுதான் சபாநாயகரின் கடமை. அதுதான் அவர் செய்ய வேண்டிய விஷயம். அவர் எப்படி நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து அதன் பிறகு சட்டமன்ற கட்சித் தலைமை முடிவு செய்யும். சட்டப்பேரவைத் தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என்பது விதி இருக்கிறது, மரபு இருக்கிறது. அதன்படி கடைபிடிப்பது தான் ஒரு சபாநாயகருக்கு அழகு. சட்டப்பேரவையில் சபாநாயகர் சொல்வதாக கூறியிருக்கிறார். அவரின் பதிலை பொறுத்து எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். சட்டப்பேரவையில் கலந்து கொள்வது பற்றி நான் முடிவு செய்ய முடியாது. எங்களின் சட்டமன்ற கட்சிக்குழு தான் முடிவு செய்யும்.

ஊடகங்கள் தான் ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு என்கிறது. ஓபிஎஸ் தரப்பில் 4 பேர் தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இன்று அதிமுக செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது நான் பேசும்போது ஈபிஎஸ் ஆதரவாளர் என்று போடுகிறார்கள். அப்படி போடக்கூடாது. அதிமுக தரப்பில் என்று போடலாம். ஒன்றரை கோடி தொண்டர்களும் இன்று ஒன்றாக இருக்கிறோம். எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால், ஊடகங்களை பார்த்தால் ஈபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று போடுகின்றன. தயவு செய்து அப்படி போடாதீங்க. 4 பேரை வைத்துக் கொண்டு ஓபிஎஸ் பேசுவது ஒரு கட்சியா? இப்போது கட்சி எங்க கையில்தான் இருக்கிறது. நாங்க தான் எல்லாமே. ஈபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று தயவு செய்து போடாதீர்கள். நாங்கதான் அதிமுக" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in