`தேர், குப்பை கூடம் எரிகிறது, மின் விளக்குகள் எரிவதில்லை': இன்பதுரை கிண்டல்

`தேர், குப்பை கூடம் எரிகிறது, மின் விளக்குகள் எரிவதில்லை': இன்பதுரை கிண்டல்

``ஆட்சியில் கும்பிட போன இடத்தில் தேர் எரிகிறது. குப்பை கூடம் எரிகிறது. மருத்துவம் பார்க்க போனால் மருத்துவ கூடமும் எரிகிறது. ஆனால் எரிய வேண்டிய மின் விளக்குகள் மட்டும் எங்கும் எரிவதேயில்லை" என்று அதிமுக முன்னாள் எம்எல்எ கிண்டல் செய்தார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தினர் ஏற்பாட்டில் களியக்காவிளை பேருந்து நிலைய திடலில் நேற்றிரவு மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை கலந்து கொண்டு பேசுகையில், "இந்துக்களுக்கு எப்படி தீபாவளி பண்டிகையோ கிறிஸ்தவர்களுக்கு எப்படி கிறிஸ்துமஸ் பண்டிகையோ இஸ்லாமியர்களுக்கு எப்படி ரம்ஜான் பண்டிகையோ அதுபோல உலகமெங்குமுள்ள தொழிலாளர்களுக்கு மே தினம் பண்டிகையாக திகழ்கிறது. இதனை கொண்டாடுவதற்கு அதிமுகவிற்கு மட்டுமே அருகதை உண்டு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சைக்கிள் ரிக்க்ஷா தொழிலாளியான ராமசாமியை எம்எல்ஏவாக ஆக்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவருக்கு பின்னால் வந்த அம்மாவும் புரட்சித் தலைவர் பாணியில் சாதாரண மில் தொழிலாளியாக இருந்த சக்தி வேல் முருகனை அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்தார். இவை எல்லாம் வரலாற்று உதாரணங்கள்.

ஆனால் திமுக அரசு தொழிலாளர்களை வஞ்சித்தது. கூலி உயர்வு கேட்டுப் போராடிய மின் மின்வாரிய தொழிலாளர்கள் தடியடி நடத்தி தாக்கியது திமுக அரசு. அப்படிபட்ட திமுகவினர் மே தினத்தை கொண்டாடலாமா? இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடக திமுக அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த அரசு. தாலிக்கு தங்கம் திட்டம் ரத்தாகிவிட்டது. மாணவர்களின் மடிக் கணிணி திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியாகி விட்டது. இலவச ஸ்கூட்டி திட்டம் தற்போது இல்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இதுவரை வழங்கப்படவில்லை. சிலிண்டருக்கு மானியம் தரப்படவில்லை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும்.

இவர்கள் ஆட்சியில் கும்பிட போன இடத்தில் தேர் எரிகிறது. குப்பை கூடம் எரிகிறது. மருத்துவம் பார்க்க போனால் மருத்துவ கூடமும் எரிகிறது. ஆனால் எரிய வேண்டிய மின் விளக்குகள் மட்டும் எங்கும் எரிவதேயில்லை! காரணம் மாநிலமெங்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டு. திமுக அரசின் கூடவே பிறந்த உடன்பிறப்பு மின்வெட்டு. திமுக ஆட்சி வந்தாலே கூடவே மின்வெட்டும் வந்விடும்" என்று பேசினார்.

Related Stories

No stories found.