`செயற்கை மின்வெட்டை உருவாக்கியுள்ளார் செந்தில் பாலாஜி': காரணம் சொல்லும் தங்கமணி

`செயற்கை மின்வெட்டை உருவாக்கியுள்ளார் செந்தில் பாலாஜி': காரணம் சொல்லும் தங்கமணி

``அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க செயற்கை மின்வெட்டை உருவாக்கி உள்ளார் செந்தில் பாலாஜி'' என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் திருச்செங்கோட்டில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பேசிய நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க செயற்கை மின்வெட்டை உருவாக்கி உள்ளார் செந்தில் பாலாஜி. நீட் தேர்வை திமுகவால் எந்த காலத்திலும் ரத்து செய் முடியாது. நீட் தேர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு எதையும் செய்ய முடியாமல் தடுமாறுகிறார்கள்.

ஆளுமைத்திறன் எடப்பாடியாருக்கு இல்லை என்று சொன்னார்கள். கூட்டணிக்கு ஒதுக்கிய இடத்தில் வெற்றி பெற்ற திமுக நகர்மன்றத் தலைவர்களை திமுக தலைவர் சேர்மன் பதவியை ராஜினாமா செய்ய வைக்க முடிந்ததா? வெறும் அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். ஓபிஎஸ் தம்பி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றபோது கட்சியை விட்டு நீக்கியவர் எடப்பாடியார். ஆளுமைத்திறன் மிக்கவர்கள் என்று மக்களுக்கு தெரியாதா? ஓட்டுப் போடாதவர்களும் பாராட்டும் விதம் ஆட்சி இருக்கும் என ஸ்டாலின் கூறினார்.

இன்று மின்வெட்டால் ஓட்டு போட்டவர்களே திட்டுகிற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 750 கொலைகள் நடந்து உள்ளது. இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதற்கு இதுவே சான்று. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து அதில் எதையும் நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்லி உள்ளாட்சித் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கினார்கள். மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள். இனி வரும் அனைத்து தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும்" என்றார்.

Related Stories

No stories found.