`அமாவாசை' அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரை ஆட்டிப்படைக்கிறார்'- ஜெயக்குமார் சாடல்

`அமாவாசை' அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரை ஆட்டிப்படைக்கிறார்'- ஜெயக்குமார் சாடல்

"அணில், அமாவாசை என்ற பெயரில் அழைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி காவல்துறை, கலெக்டர் ஆகியோரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கரூரை ஆட்டிப்படைக்கிறார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருவதாகவும், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு கிடக்கிறது. கரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக அணில், அமாவாசை என்ற பெயரில் அழைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி காவல்துறை, கலெக்டர் ஆகியோரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கரூரை ஆட்டிப்படைக்கிறார். கரூரில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த 19-ம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் மீது ஆசிட் மற்றும் கற்களை வீசிவிட்டு அதிமுகவை சேர்ந்த திருவிகா என்பவர் கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டார். போதுமான ஆதாரங்கள் இருந்தும் காவல்துறையினர் கடத்திய நபர்கள் மீது வெறும் வழக்குப்பதிவு மட்டுமே செய்து, அதிமுகவினர் 72 பேர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக செந்தில்பாலாஜி உத்தரவின் பேரில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது.

ஆளுங்கட்சியினர் குற்றத்தில் ஈடுபட்டால் வெறும் வழக்குப்பதிவு மட்டுமே. ஆனால் எதிர்க்கட்சியினர் குற்றத்தில் ஈடுபடாவிட்டாலும் பொய் வழக்குபோட்டு கைது செய்வார்கள். ஆளுங்கட்சிக்கு சட்டமில்லை. எதிர்க்கட்சிக்கு மட்டுமே சட்டம் உண்டு. இதுதான் திராவிட மாடலா?. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரம் இருப்பதால் ஆடுகிறார். அவரின் பேச்சை கேட்டு காவல்துறை எஸ்.பி, கலெக்டர் எல்லாம் ஆடுகிறார்கள். ஆட்சி மாறினால் அனைவரும் இதற்கு பதில் அளிக்க வேண்டும். தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக டிஜிபி தெரிவித்தார்" எனக் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in