அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு திடீர் ரத்து: காரணம் என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு திடீர் ரத்து: காரணம் என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகாரைத் திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராகச் துணை நடிகை சாந்தினி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அமைச்சர் மணிகண்டனும் நானும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தோம். கருவுற்ற என்னை மிரட்டி பலமுறை கருவைக் கலைக்கச் செய்துள்ளார். இந்த நிலையில் என்னைத் திருமணம் செய்ய மறுக்கிறார். அவரும் நானும் சேர்ந்து இருந்த ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.

நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாறு காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவான நிலையில், பெங்களூருவில் தங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மணிகண்டன் தரப்பில் பலமுறை செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், பல்வேறு நிபந்தனைகளோடு அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு மகளிர் போலீஸார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் மீதான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in