முதல்வர் துபாய் சென்றது அரசு முறை பயணமா? அரசர் முறை பயணமா?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி கேள்வி
முதல்வர் துபாய் சென்றது அரசு முறை பயணமா? அரசர் முறை பயணமா?

முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றது அரசு முறை பயணமா? அரசர் முறை பயணமா? முதலீடு ஈர்க்கவா அல்லது முதலீடு செய்யவா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி கேள்வி எழுப்பினார்.

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி கையெழுத்திட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆஜரானார். கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 வாரங்களாக திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆஜராகி கையெழுத்திட்டுள்ளதாகவும், அதேபோல ஒவ்வொரு திங்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைப்படி இன்று ஆஜராகி கையெழுத்திட்டுள்ளதாகவும் சனி, ஞாயிறு உட்பட மீதமுள்ள நாட்களில் ராயபுரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைத்தும் அவர்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிற்சங்கங்கள், தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளாக பழைய பென்ஷன் திட்டம், ஊதிய உயர்வு, 100 ரூபாய் கேஸ் மானியம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்டவை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, மாநில அரசு முழுக்க முழுக்க தொழிலாளர் விரோதப் போக்கை முன்னெடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், எவ்வளவோ விமானங்கள் துபாய்க்கு செல்ல இருந்தும், விமானம் இல்லை என்பதைக் காரணம் காட்டி குடும்பத்தினருடன் தனி விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றது ஏன்? இந்த பயணம் அரசுமுறைப் பயணமா? அரசர் முறை பயணமா? முதலீட்டை ஈர்க்கவா அல்லது முதலீடு செய்யவா? இவற்றையெல்லாம் பார்க்கும்போது தி.மு.க ஒரு குடும்பக்கட்சி என்பதற்கு மக்களே சாட்சி எனவும் அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்ற அ.தி.மு.க-வின் நிலைபாட்டை பின்பற்றி நாங்கள் எடுத்த அதே சட்டப் போராட்டத்தைதான் தி.மு.க அரசும் முன்னெடுத்துள்ளதாகவும், விரைவில் மத்திய பா.ஜ.க அரசுக்கு அடிமை வேலை செய்யக்கூட தி.மு.க தயாராகிவிடும் என குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.