`ஈரோடு கிழக்கில் டி.டி.வி.தினகரன் 'ஜகா' வாங்கியதற்கு இதுதான் காரணம்'- சொல்கிறார் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்"தேர்தல் என்றாலே டிடிவி தினகரனுக்கு அச்சம் ஏற்பட்டு விடுகிறது" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

’’தேர்தல் என்றாலே டி.டி.வி.தினகரனுக்கு பயம் வந்துவிடுகிறது. அதனால் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து ஜகா வாங்கிவிட்டார்’' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிங்கார வேலனின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ சிங்கார வேலனுக்கு அதிமுக ஆட்சியில் தான் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு எங்களுக்கு தில் இருந்தது. அதனால் விருப்பம் தெரிவித்தோம்.

தேர்தலில் நிற்பதற்கே தில் வேண்டும். ஓபிஎஸ்ஸுக்கு முன்மொழியவே ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் என்றாலே பயம். அதனால் அவர் ஜகா வாங்கிக் கொண்டார். ஆனால் நாங்கள் எங்கள் விருப்பத்தை தமாகாவிடம்தெரிவித்தோம். தற்போது களத்தில் நிற்கிறோம்.

எதிரி அதிமுக நிற்கிறது. நாங்கள் போட்டியிடுகிறோம் என தில்லாக திமுக ஏன் வரவில்லை. ஏற்கெனவே காங்கிரஸ் வேஸ்ட் லக்கேஜ் என அந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் தோற்கப் போவது உறுதி. தோற்றதும் திமுக என்ன சொல்லும், நாங்களா நின்றோம். காங்கிரஸ் தானே நின்றது என கைக்கழுவி விட்டுப்போய்விடுவார்கள்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. சட்ட, ஒழுங்கு சரியில்லை. நேற்றையத் தினம் கூட 9 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதுவும் முதலமைச்சர் தொகுதியில். இப்படி இருக்க இதையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுத்தானே இருக்கிறார்கள். நிச்சயம் திமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடமாட்டார்கள்.

85% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளதாக எப்படித்தான் வாய்க் கூசாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பொய்க் கூறுக்கிறார் என எனக்கு தெரியவில்லை. எலி பொறியில் மாட்டுக் கொண்டுள்ளது போலத்தான் திமுகவின் நிலைமை இன்றைக்கு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். அந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.

ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் குவிந்துள்ளனர். ஆயிரம் கோடி செலவு செய்தாவது வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என நினைக்கிறார்கள். மீனவர் வாழ்வாதாரத்தை அழித்து நினைவு சின்னம் தேவையா?. அறிவாலயத்தில் 10 ஆயிரம் அடி கூட சிலை வைத்துக் கொள்ளட்டும்’’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in