திமுக எம்.பி நிதியில் சீரமைக்கப்பட்ட மேம்பாலம்… திறந்து வைத்த அதிமுக நிர்வாகி: காட்பாடியில் பதற்றம்!

அப்பு
அப்பு

வேலூரில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் தொகுதி நிதியில் சீரமைக்கப்பட்ட மேம்பாலத்தை அதிமுக மாவட்டச் செயலாளர் திறந்து இன்று வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கைது செய்ய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து திறப்பதற்கு ஆயத்தமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் வேலூர் மாநகர அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு என்பவர் இன்று காலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று மேம்பாலத்தில் ரிப்பன் கட்டி அதை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துள்ளார்.

வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்தின் தொகுதி நிதியிலிருந்து இந்த மேம்பாலம் சீரமைக்கப்பட்டுள்ளது என்பதால், திமுக பிரமுகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் வெடிக்கும் சூழல் உருவானது. இதுகுறித்து வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை அப்புவின் வீட்டிற்கு வந்த காவல் துறையினர் அவரை கைது செய்ய முற்பட்டனர். தகவல் அறிந்து அதிமுக பிரமுகர்கள் அப்புவின் வீட்டில் குவிந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியும் அப்புவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் அப்பு தனது வீட்டில் உள்ள ஓர் அறையில் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டுள்ளார். காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிவிரைவுப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான சூழலில், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்குக் கூட போலீஸார் தன்னை அனுமதிக்கவில்லை என வீட்டிற்கு வெளியே வந்த அப்புவின் மனைவி அங்கு கூடியிருந்த அதிமுகவினரிடம் தெரிவித்தார். அப்புவை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் முனைப்புக் காட்டி வருவதால் அங்குத் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. மேம்பாலம் திறந்து வைத்ததுதான் காரணமா அல்லது வேறுகாரணமா என காவல்துறையினர் இதுவரை தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in