நிதித்துறை வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கண்டனம்

பேராசிரியர் க.அன்பழகன் சிலையை திறந்து வைத்து மரியாதை செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேராசிரியர் க.அன்பழகன் சிலையை திறந்து வைத்து மரியாதை செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தின் பெயர், அம்மா வளாகம் என்றிருந்ததை, பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயரிட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக மூத்த தலைவரான மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டினை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று(டிச.19) நடைபெற்றன. அதன்படி சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த வளாகத்துக்கு பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.

இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேற்படி வளாகத்துக்கு அம்மா வளாகம் எனப் பெயர் வழங்கப்பட்டு வருகையில், தற்போது புதிய பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு இருவரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

இருவரும் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வராக ஜெயலலிதாவின் சாதனைகள் மற்றும் சிறப்புகளை பட்டியலிட்டவர்கள், அவற்றை கௌரவிக்கும் வகையிலேயே நந்தனம் நிதித்துறை வளாகத்துக்கு அம்மா வளாகம் என பெயர் சூட்டப்பட்டதாக விளக்கம் தெரிவித்துள்ளனர். மேலும் அம்மா வளாகம் என்ற பெயரை நிரூபிக்கும் வகையில் அரசின் கோப்புகளில் இருந்து சான்றுகளையும் முன்வைத்துள்ளனர்.

இறுதியாக பேராசிரியர் க.அன்பழகனுக்கு நிதித்துறை வளாகத்தில் சிலை வைத்ததில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என விளக்கியதுடன், வளாகத்தின் பெயர் மாற்றத்துக்கு மட்டும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ”ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொருவரை புகழ்வது போல் ஆகும். இது போன்ற செயல் தமிழ்ப் பண்பாட்டிற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் எதிரான செயல். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பேராசிரியர் க.அன்பழகன் சிலையினை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அது தொடர்பான செய்தியில், ‘பண்பின் சிகரம் - நட்பின் இலக்கணம், நான் பெரியப்பா என்று அன்போடு அழைத்த நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டையொட்டி, நந்தனம் - ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து, அவ்வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டினேன்’ என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in