வானகரத்துக்கு படையெடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்... பொதுக்குழு இடத்தில் பேனர்கள் கிழிப்பு: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

வானகரத்துக்கு படையெடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்... பொதுக்குழு இடத்தில் பேனர்கள் கிழிப்பு: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்ட பேனர்களைப் பேரணியாகச் சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொதுக்குழுவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தை நோக்கி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காவல்துறையினருக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. நாங்களும் அதிமுகவினர்தான், ஓபிஎஸ் விழாவில் கலந்து கொள்ள இருப்பதால், விழா ஏற்பாடுகளைப் பார்க்க வந்திருக்கிறோம் என அவர்கள் தெரிவித்ததையடுத்து, மண்டப வாயில் வரை அவர்களை காவல்துறையினர் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மண்டபம் உள்ளே அனுமதிக்காத காரணத்தால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரும்பிச் சென்றனர். அப்போது மண்டபம் அருகே தொண்டர்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இதனிடையே, ஈபிஎஸ் ஆதரவாளரான அதிமுக வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா (எ) பேரழகன் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தலைமையில் வந்த கும்பல் திரும்பிச் செல்லும்போது பேனரை கிழித்து சென்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in