சசிகலாவை வரவேற்ற நிர்வாகிகள்... அதிரடியாக நீக்கிய டிடிவி! அமமுகவில் நடப்பது என்ன?

சசிகலாவை வரவேற்ற நிர்வாகிகள்...  அதிரடியாக நீக்கிய டிடிவி! அமமுகவில் நடப்பது என்ன?

முசிறியில் சசிகலாவிற்கு வரவேற்பு கொடுத்த அமமுக நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நீக்கியுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது அதிகார மையமாக திகழ்ந்தவர் சசிகலா. ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளால், வழக்குப் போட்டும் அதிமுகவிற்குள் நுழைய முடியாமல் தவித்து வருகிறார். இதனால் அமமுகவை துவங்கிய டி.டி.வி.தினகரன், அதிமுகவிற்கு எதிராக கருத்து சொல்லாமல், ஆளுங்கட்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் அதிமுகவில் சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இந்த கோரிக்கையை முன்னாள் முதல்வரும், அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார்.

இச்சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சசிகலா புனித யாத்திரை சென்று வருகிறார். அவரைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் காரணமாக சசிகலாவை அதிமுகவினர் சந்திப்பதைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால், சசிகலா செல்லும் இடமெல்லாம் அமமுகவினர் உற்சாகமாக வரவேற்பளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏப்ரல் 11- ம் தேதி சேலம் செல்வதற்காக திருச்சிக்கு சசிகலா வந்தார். அப்போது அவர், திருச்சி சமயபுரம் கோயில் மற்றும் முசிறி பகுதிகளில் உள்ள உத்தமர் கோயில், திருவாசி சிவாலயம், குணசீலம் பெருமாள் கோயில், வெள்ளூர் சிவாலயம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்தார். அவருக்கு அமமுக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.

இந்த நிலையில் சசிகலாவிற்கு வரவேற்பு கொடுத்த திருச்சி வடக்கு மாவட்ட அமமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாலகுமார், முறிசி தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முசிறி நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த போது, "சசிகலாவை வரவேற்கப் போகக்கூடாது என்று உத்தரவிட்டும் இவர்கள் சென்றதால் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டுள்ளனர்" என்று அமமுகவினர் தெரிவித்தனர்.

சசிகலாவால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட டி.டி.வி.தினகரன், எதற்கு இந்த நடவடிக்கை எடுத்தார் என்று அமமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in