தீர்த்தவாரி நிகழ்ச்சி குறித்து அறநிலையத்துறைக்கு தெரிவிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபுதீர்த்தவாரி நிகழ்ச்சி குறித்து அறநிலையத்துறைக்கு தெரிவிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!
Updated on
1 min read

``மூவரசம்பேட்டை தர்ம லிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு நிர்வாகிகள் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த குளம் கோயில் குளமல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கும் குளம்'' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மூவரசம்பேட்டை தர்ம லிங்கேஸ்வரர் கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் போது பேசிய அவர், ‘’ நிகழ்ச்சிகள் நடைபெறும் திருக்கோயில் குளங்களை அரசு முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள நிதி உதவி போதுமானதாக இல்லை. அதனால் அதனை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துப் பேசுகையில், ‘’தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற குளம் கோயில் குளமல்ல; பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம். இந்த குளத்தில் கடந்த 4 ஆண்டு காலமாகத்தான் இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த திருக்கோயில் சேவா சங்கம் என்ற ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு 5 பேர் நிர்வாகிகளாக உள்ளனர். அவர்கள் தான் அந்த திருக்கோயிலை நிர்வகித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தொல்லியல் துறை, மாநில அரசின் அனுமதி இல்லாமல் குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டார்கள் ஆனால் அதனை இணை ஆணையர் தடுத்து நிறுத்தினார். இதனைக் குறிப்பிடக் காரணம், திருக்கோயில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தானாக எந்தவித அனுமதியும் இல்லாமல் நிகழ்ச்சிகளை நடத்த முற்படும்போது இம்மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

5 விலை மதிப்பில்லாத உயிர்களை இழந்துள்ளோம். இரக்கத்தின் இதயமாக விளங்கும் முதலமைச்சர் சம்பவத்தை அறிந்த உடனே மாவட்ட அமைச்சரை அழைத்து சம்பவம் குறித்து விசாரித்து, சம்பவத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்போவதைக் கோயில் நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத்துறைக்குத் தெரிவிக்கவில்லை. கடந்த காலங்களில் இம்மாதிரியான விபத்துகளுக்கு எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டதோ அதையேதான் தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ளார். இம்மாதிரியான சம்பவங்கள் இனி நடைபெறாமல் கவனமாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in