இனப்படுகொலைக்கு வெறுப்பு பேச்சுதான் காரணம்; எதிர்க்கும் தபெதிக: கனல் கண்ணனுக்கு ஜாமீன் கிடைக்குமா?

இனப்படுகொலைக்கு வெறுப்பு பேச்சுதான் காரணம்; எதிர்க்கும் தபெதிக: கனல் கண்ணனுக்கு ஜாமீன் கிடைக்குமா?

கனல் கண்ணன் ஜாமீன் மனுவை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம்.

இந்து முன்னணியின் சார்பில் தொடங்கிய இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணத்தின் நிறைவு விழா கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் 'ஸ்ரீரங்க கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்' என பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கனல் கண்ணன் மீது சென்னை காவல்துறையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து கனல் கண்ணனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். இதனிடையே, கனல் கண்ணனுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சார்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழ் நாடின் பெரும்பான்மையான மக்களான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு மேப்பாட்டிற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். அவரது சிலையை உடைக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டின் மீதான தாக்குதல்.

மேலும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதோடு மட்டுமல்லாமல் பிறரையும் தூண்டும் வண்ணம் பேசியிருப்பது திட்டமிட்டே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. வெறுப்பு பேச்சு தான் பல நாடுகளில் இனப்படுகொலைகள் ஏற்பட காரணமாக இருந்தது. ஆகவே கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும்" என்று வாதிட்டோம். பல இனப்படுகொலைகள் நடைபெறுவதற்கு காரணம் வெறுப்பு பேச்சு தான் ஆகவே நீதிமன்றம் அத்தகைய சூழலுக்கு வழிவகுக்க அனுமதிக்க கூடாது.

எனவே, வழக்கு விசாரணை நிறைவடையாமல் இருப்பதன் காரணமாகவும், வெறுப்பு பேச்சின் காரணமாக வன்முறையையும், பதற்றத்தையும் தூண்டும் வண்ணம் செயல்பட்ட ,

தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசி கலவரத்தை தூண்டிய நடிகர் கனல் கண்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனு மீதான தீர்ப்பை சென்னை- முதன்மை குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in