மேகேதாட்டு அணைக்கு எதிராக ஒத்திவைப்புத் தீர்மானம்

தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தல்
மேகேதாட்டு அணைக்கு எதிராக ஒத்திவைப்புத் தீர்மானம்

கர்நாடக அரசு மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட எடுத்துள்ள முயற்சிக்கு எதிராக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று மக்களவை செயலாள(பொது)ரிடம் கொடுத்துள்ள கடிதத்தில், "தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என காவிரி தீர்ப்பாயமும் உச்ச நீதிமன்றமும் ஆணை பிறப்பித்திருக்கிற நிலையில், கர்நாடக அரசு அந்த ஆணையை மீறும் வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தனது நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியுள்ளது. ஒன்றிய அரசும் இதனை ஊக்கப்படுத்துகிறது. இது வெளிப்படையாக தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம். நாடாளுமன்றத்தில் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இதனை உடனடியாக விவாதிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், "கர்நாடக அரசு மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு ரூ.1000 கோடி அணையைக் கட்டுவதற்கென ஒதுக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, இப்பிரச்சினை பற்றி மக்களவையில் விவாதிக்க வேண்டியது தவிர்க்க இயலாதது. எனவே, மேகேதாட்டு அணை தொடர்பாக மக்களவையில் விவாதிப்பதற்கு பிற அலுவல்களை ஒத்திவைக்கக் கோரி விசிக சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in