போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் ஓபிஎஸ்: அசம்பாவிதத்தை தடுக்க நடவடிக்கை

போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் ஓபிஎஸ்: அசம்பாவிதத்தை தடுக்க நடவடிக்கை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு 35-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக 15 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே நேற்று வன்முறை வெடித்தது. இதனால் அந்த இடம் போர்க்களம் போலக் காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைத்திருந்தனர். மேலும் இருதரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் கலவரம் ஏற்படாதவாறு அதிமுக அலுவலகம் மற்றும் அதிமுக பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை பசுமை வழிச் சாலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வசித்து வருகிறார்கள். அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தையடுத்து, ஓபிஎஸ் இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று 35க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த நிலையில், இன்று காலை முதல் கூடுதலாக 15 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அதுபோல் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்பகுதிகளில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு சிறப்பு பாதுகாப்புப் படையினரும், ஆயுதப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in