`சின்னம்மாவை அதிமுக சேர்க்கணும்; இல்லையென்றால் நாங்கள் சேர்க்கத் தயார்'- பற்றவைத்த நயினார் நாகேந்திரன்

`சின்னம்மாவை அதிமுக சேர்க்கணும்; இல்லையென்றால் நாங்கள் சேர்க்கத் தயார்'- பற்றவைத்த நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

``சின்னம்மாவை அதிமுகவில் சேர்த்தால் அதிமுக வலுப்பெறும்'' என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு விரைவில் தான் பொறுப்பேற்க போவதாக சசிகலா தொடர்ந்து கூறிவருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அது சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்குத்தான் என்று செய்திகள் எழுந்த நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமணத்துக்காக இன்று புதுக்கோட்டை வந்திருந்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், `அதிமுகவில் சின்னம்மாவை சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும்.

அதிமுகவில் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பாஜகவுக்கு நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது குறித்து கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக காற்றில் பறக்கவிட்டு வருகின்றது. தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in