‘அதானி பாஜகவின் புனித பசு’ - பசுக்கள் கட்டியணைப்பு தினம் குறித்து சஞ்சய் ராவத் விமர்சனம்

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்அதானி பாஜகவின் புனித பசு

பிப்ரவரி 14-ம் தேதி பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினத்தை கொண்டாடுமாறு விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை விமர்சித்துள்ள சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத், கௌதம் அதானி பாஜகவுக்கு புனிதமான பசு என்று தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ம் தேதியை பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினமாகக் கொண்டாடுமாறு விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுவது நேர்மறை ஆற்றலை பரப்பும், கூட்டு மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதனை விமர்சித்துள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், அதானி பாஜகவுக்கு புனிதமான பசு என்றும், அக்கட்சி தனது புனிதமான பசுவை கட்டிப்பிடித்துள்ளது என்றும் கூறினார். அவர், "பாஜகவிற்கு அதானி ஒரு புனிதமான பசு. எனவே, அவர்கள் தங்கள் புனித பசுவை கட்டிப்பிடித்து மற்ற பசுக்களை காதலர் தினத்தில் கட்டிப்பிடிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் நாங்கள் பசுவை கோமாதாவாக மதிக்கிறோம், எங்கள் பாசத்தைக் காட்ட குறிப்பிட்ட நாள் எதுவும் தேவையில்லை” என்று கூறினார்.

பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள அதானி நிறுவனங்களுக்கு எதிராக வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை அல்லது உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பான அமளி காரணமாக நடப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பல முறை ஒத்திவைக்கப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in