
பிரதமர் மோடியை தொழிலதிபர் கௌதம் அதானி ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகிறார் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என்று நேற்று முன்தினம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசத்தில் ஷாடோல் மாவட்டம் பியோஹரி என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “ நாட்டில் தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை அறிந்து கொள்வது அவசியம். உடலில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிய எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது
அதுபோல சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்ரே போன்றது. அதன்மூலம், மேற்கண்ட சாதியினரின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம். எனவே என்ன ஆனாலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நிலைக்கு மத்திய அரசை தள்ளுவோம்.
இந்த கணக்கெடுப்பு நடத்துவது என்பது தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் நிலைமையை வெளிப்படுத்தும். ஆனால், பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசாமல் மவுனம் சாதிக்கிறார். பாகிஸ்தான் பற்றியும், ஆப்கானிஸ்தான் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை கௌதம் அதானி, 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் இயக்குகிறார்” என்றார்
தொடர்ந்து பேசிய அவர், “மத்தியபிரதேசத்தில் தொழிற்கல்வி தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்தன. அந்த ஊழலை மறைப்பதற்காக 40 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். மத்தியபிரதேசம்தான், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆய்வுக்கூடம் என்று முன்பு எல்.கே.அத்வானி கூறினார். பா.ஜனதாவுக்கு மட்டுமல்ல, வியாபம் ஊழல், ஆயுஷ்மான் பாரத் திட்ட ஊழல் போன்ற ஊழல்களின் ஆய்வுக்கூடமாகவும் மத்திய பிரதேசம் இருக்கிறது.
நாட்டின் நிலம், நீர், வனம் ஆகியவற்றில் பழங்குடியினருக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்கள் மீது பா.ஜனதாவினர் சிறுநீர் கழிக்கின்றனர். மத்தியபிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களில் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.1,500 செலுத்துவோம். ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும்” என்றார்
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!