
உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி முன்னேறியுள்ள நிலையில், மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது அவரது நிறுவனம்.
இந்தியாவின் பெரும் பணக்காரரான குஜராத்தை சேர்ந்த கெளதம் அதானி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உலகின் 3-வது பெரும் பணக்காரர் ஆனார். அப்போது ஆசியாவிலேயே உலகின் முதல் 3 இடத்திற்கும் வந்த முதல் நபர் என்னும் சிறப்பை பெற்றார் அதானி. தற்போது அதானி குழும பங்குகளான அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல பங்குகள் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றன. இதனால் அக்குழும தலைவர் அதானியின் சொத்து மதிப்பும் அதிகரித்து வருகின்றன. இந்தாண்டு மட்டும் அவரின் நிகர சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனிடையே, போர்ப்ஸின் ரியல் டைம் அறிக்கையின் படி, அதானியின் நிகர மதிப்பு 155.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் இதன் மூலம் 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் 2-வது பெரும் பணக்காரரானார் அதானி என்றும் அவரது இன்றைய சொத்து மதிப்பு 12.45 லட்சம் கோடி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வரும் டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 21.88 லட்சம் கோடியாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக அதானி நிறுவனம் உருவெடுத்துள்ளது. சிமென்ட் உற்பத்தியில் முன்னணியில் இருந்த அம்புஜா நிறுவனத்தின் 65.15 புள்ளி பங்குகளையும், ஏசிசி நிறுவனத்தின் 56.69 பங்குகளையும் அதானி நிறுவனம் வாங்கியுள்ளது. இதையடுத்து ஆண்டுக்கு 67.5 மில்லியன் டன் உற்பத்தி திறனுடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக அதானி நிறுவனம் உருவெடுத்துள்ளது. இவர் பிரதமர் மோடியின் நண்பர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.