புகாரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி! மனைவியுடன் சீமான் ஆஜர்! போலீஸார் தீவிர விசாரணை

மனைவியுடன் சீமான் ஆஜர்
மனைவியுடன் சீமான் ஆஜர்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது மனைவியுடன் ஆஜரானார்.

திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால், என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். மேலும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, நேரில் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், கடந்த 12-ம் தேதி சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், வளசரவாக்கம் போலீஸார், சீமானுக்கு கடந்த 14ம் தேதி 2-வது முறையாக சம்மன் வழங்கினர். இதையடுத்து, சீமான் செப்டம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார் என்று அவரது தரப்பினர் தெரிவித்தனர்.

மனைவியுடன் சீமான் ஆஜர்
மனைவியுடன் சீமான் ஆஜர்

இந்தநிலையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை திடீரென வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி. எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கினார். "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை" என்று நடிகை விஜயலட்சுமி கூறினார்.

இந்தநிலையில், தனது மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழியுடன் சீமான் இன்று மதியம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணைக்கு சீமானுடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in