போலி ஆவணங்களால் விற்கப்பட்ட பிரபல நடிகையின் 20 கோடி சொத்து: மீட்டுக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

போலி ஆவணங்களால் விற்கப்பட்ட பிரபல நடிகையின் 20 கோடி சொத்து: மீட்டுக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட பிரபல நடிகையின் நிலத்தை புதிய சட்டத் திருத்தம் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் மீட்டுக் கொடுத்துள்ளார்.

பத்திரப்பதிவு துறையில் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமே நிலத்தைக் கொடுக்கக் கூடிய சட்டத் திருத்த மசோதா அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டத் திருத்தத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்த நிலையில் கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட சொத்துகளை மீட்டு உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத்துறை அதிகாரிகளே ரத்து செய்யும் சட்ட திருத்தத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக, ஐந்து பேருக்கு இன்று நில உரிமை ஆவணங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

'உயர்ந்த மனிதன்', 'நிறைகுடம்', 'குலமா குணமா', 'வசந்த மாளிகை', 'கண்ணன் என் காதலன்', 'தலைவன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் வாணிஸ்ரீ. சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் 20 கோடி ரூபாய் மதிப்புடைய இவரின் 9000 சதுர அடி நிலத்தைப் போலி ஆவணம் தயாரித்து மோசடி கும்பல் விற்பனை செய்திருந்தது.

தற்போது புதிய சட்டம் அமலுக்கு வந்த நிலையில் போலி பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டு அவருக்கு நில உரிமைக்கான ஆவணம் வழங்கப்பட்டது. போலி பத்திரப்பதிவு செய்யப்படுவதால் நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடி பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு தங்களது சொத்துகளை பெறும் நடை முறை இருந்துவந்தது. இதனால் ஏற்படும் காலவிரயத்தைத் தடுக்க தமிழக அரசு சார்பில் பதிவு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in