பாஜகவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட்டின் மரணத்தில் மர்மம்? - சிபிஐ விசாரணையைக் கோரும் குடும்பத்தினர்!

பாஜகவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட்டின் மரணத்தில் மர்மம்? - சிபிஐ விசாரணையைக் கோரும் குடும்பத்தினர்!

ஹரியானாவை சேர்ந்த பாஜக நிர்வாகியான நடிகை சோனாலி போகட்டின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், சிபிஐ விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

42 வயதான நடிகை சோனாலி போகட் திங்கள்கிழமை இரவு மரணமடைந்தார். இவரது மரணம் தொடர்பாக குடும்பத்தினர் கேள்வி எழுப்பியதால், காவல்துறை இதனை "இயற்கைக்கு மாறான மரணம்" என்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

சோனாலி மாரடைப்பால் இறந்ததை தனது குடும்பத்தினர் ஏற்கவில்லை என்று கூறிய அவரது சகோதரி ராமன், “எனது சகோதரிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்காது. அவர் மிகவும் உடற்தகுதியுடன் இருந்தார். சிபிஐ மூலம் முறையான விசாரணையை நாங்கள் கோருகிறோம். அவர் மாரடைப்பால் இறந்தார் என்பதை எனது குடும்பத்தினர் ஏற்கத் தயாராக இல்லை. அவருக்கு அப்படியொரு மருத்துவப் பிரச்சனை இல்லை. இறப்பதற்கு முந்தைய நாள் மாலை அவரிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் வாட்ஸ்அப்பில் பேச விரும்புவதாகச் சொன்னார், மேலும் ஏதோ தவறாக நடக்கிறது என்று சொன்னார். பின்னர் அழைப்பைத் துண்டித்தார். அதற்கு பிறகு அழைக்கவும் இல்லை, நான் அழைத்தபோது எடுக்கவும் இல்லை. திங்கட்கிழமை இரவு உணவு சாப்பிட்டபின்பு ஏதோ தவறாக இருப்பதாக என் அம்மாவிடம் சொன்னார்" என்று கூறினார்.

தனது உதவியாளர்களுடன் கோவா சென்றிருந்த சோனாலி போகட், திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக பேசிய கோவா காவல்துறைத் தலைவர் ஜஸ்பால் சிங், இந்த மரணத்தில் இதுவரை தவறான முகாந்திரம் எதுவும் இல்லை. ஆனால் பிரேதப் பரிசோதனையின் முடிவில்தான் மரணத்தின் காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்று கூறினார்.

சோனாலி போகட் டிக்டாக் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றார். 2006 ம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமான அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர், 2020ல் பிக் பாஸில் நடித்தும் புகழ் பெற்றார். 2019 ஹரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

திங்கட்கிழமை இரவு உயிரிழப்பதற்கு முன்பு மாலை 7 மணி முதல் 8 மணி வரை, அவர் இன்ஸ்டாகிராமில் இரண்டு வீடியோக்களையும் நான்கு படங்களையும் பதிவு செய்துள்ளார். சோனாலி போகட்டின் கணவர் சஞ்சய் போகட்டும் 2016 ல் 42 வயதில் மர்மமான முறையில் இறந்தார்.

சோனாலி போகட் அடிக்கடி சர்ச்சைக்குரிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பவர். ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​ "பாரத் மாதா கி ஜெய்" என்று முழக்கமிடாதவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களா என்று கேள்வி எழுப்பியது சர்ச்சையாகியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோனாலி போகட், ஹிசாரில் ஒரு அதிகாரியை அறைந்து செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

சோனாலி போகட் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை கோரிக்கை வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in