
ராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதம் கிடையாது என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி, “ கமல் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியலுக்காக சமரசம் செய்கிறார்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கமல் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் தன் அறத்தையும் அறிவாற்றலையும் அரசியலுக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம். ஆதி மனிதன் தன்னை ஒரு போதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை.அந்த காலத்தில் ஹோமோசெப்பியன்ஸ் என்ற பேரே இல்லை. அதனால் அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?” என தெரிவித்துள்ளார்
நேற்று சென்னையில் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை பார்த்த கமல்ஹாசன் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்." என்று சொன்னார். இந்த கருத்துக்குத்தான் இப்போது நடிகை கஸ்தூரி பதில் ட்வீட் செய்துள்ளார்.